செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 23 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிதி உதவி- முதலமைச்சர் உத்தரவு

Published On 2020-12-03 03:47 GMT   |   Update On 2020-12-03 03:47 GMT
பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 23 பேரின் குடும்பத்திற்கு பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.1 லட்சம் வழங்க எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு உள்ளார்.
சென்னை:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கோவை மாவட்டம், ஒட்டர்பாளையம் கிராமத்தை சேர்ந்த துரைசாமி, புதுக்கோட்டை மாவட்டம், விராலூரைச் சேர்ந்த பொன்மணி ஆகியோர் சாலை விபத்தில் உயிரிழந்தனர் என்ற செய்தியையும், கறம்பக்குடி வட்டம், மந்தக்கொல்லையை சேர்ந்த முருகேசன் பஸ் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தார், திருப்பூர் மாவட்டம், கணக்கம்பாளையத்தைச் சேர்ந்த ஆகாஷ் மற்றும் சஞ்சய் ஆகிய இருவரும் வாய்க்காலில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியையும் கேட்டு வேதனை அடைந்தேன்.

கோவில்பட்டி பாரதி நகரைச் சேர்ந்த பாலாஜி ரெயில் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார் என்ற செய்தியையும், ராணிப்பேட்டை மாவட்டம், ஆயர்பாடியை சேர்ந்த சுதாகர் சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியையும்; ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடம் ராஜா நகரைச் சேர்ந்த கார்சன் என்பவர் மீன்பிடி பணியில் ஈடுபட்டபோது, கடலில் தவறி விழுந்து உயிரிழந்தார் என்ற செய்தியையும் கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

பரமக்குடி வட்டம், டி.கருங்குளத்தைச் சேர்ந்த மீனா என்பவர் எதிர்பாராதவிதமாக தீ பட்டதில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தியையும், ஆலங்குளம் வட்டம், கழுநீர்குளத்தை சேர்ந்த துரைச்சி, பொன்னம்மாள் மற்றும் மாடசாமி ஆகிய 3 பேரும் புல் அறுக்க சென்றபோது, எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தனர் என்ற செய்தியையும், சத்தியமங்கலம் வட்டம், குத்தியாலத்தூரைச் சேர்ந்த தங்கமணி சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியையும் கேட்டு வேதனை அடைந்தேன்.

சத்தியமங்கலம் வட்டம், நல்லூரைச் சேர்ந்த ரோஜாமணி சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியையும், திருக்கழுக்குன்றம் வட்டம், ருத்திரகோட்டி கிராமத்தைச் சேர்ந்த யுகேஷ் நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும், எடையாத்தூரைச் சேர்ந்த செல்வகுமார் நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும், சேலம் மேற்கு வட்டம், கந்தம்பட்டியைச் சேர்ந்த மவுலீஸ்வரன் மற்றும் லித்திக் ஆகியோர் காற்று நிரப்பும் தொட்டி வெடித்ததில் உயிரிழந்தனர் என்ற செய்தியையும், விளாகம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ் ஏரியில் மூழ்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும் கேட்டு வேதனை அடைந்தேன்.

தாம்பரம் சேலையூரைச் சேர்ந்த சதீஷ் கடலில் மூழ்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும், வேலூர் மாவட்டம், போடிப்பேட்டையைச் சேர்ந்த நதியா மற்றும் அவருடைய மகள்கள் நவிதா, அஸ்வினி ஆகிய 3 பேரும் நிலைதடுமாறி ஆற்றில் விழுந்து உயிரிழந்தனர் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

சாலை விபத்து மற்றும் நீரில் மூழ்கி உயிரிழந்த 23 பேரின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்து கொள்கிறேன். மேற்கண்ட சம்பவங்களில் உயிரிழந்த 23 பேரின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News