செய்திகள்
முககவசம்

பெரியகுளத்தில் முககவசம் அணியாத 32 பேருக்கு அபராதம்

Published On 2020-12-02 10:26 GMT   |   Update On 2020-12-02 10:26 GMT
பெரியகுளத்தில் முககவசம் அணியாத 32 பேருக்கு அபராதம் விதித்து நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பெரியகுளம்:

பெரியகுளம் நகராட்சி சார்பில், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பொதுமக்கள் முககவசம் அணிவதுடன், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனாலும் பெரியகுளத்தை சேர்ந்த பொதுமக்கள் பலரும் முககவசம் அணியாமல் நடமாடி வருகின்றனர். இதற்கிடையே கொரோனா வைரசின் 2-ம் அலை வீசக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து பெரியகுளம் நகராட்சி சார்பில் முன்எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, பொதுமக்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிப்பதுடன், அடிக்கடி கைகளை சோப்பு கொண்டு கழுவ வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது. இதற்கிடையே மாவட்ட கலெக்டரின் உத்தரவின்பேரிலும், நகராட்சி ஆணையர் அசோக்குமார் அறிவுரையின்பேரிலும் நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் அசன் முகமது, அலெக்சாண்டர் ஆகியோர் மேற்பார்வையில் பெரியகுளம் நகர் பகுதியில் நேற்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அப்போது முக கவசம் அணியாத 32 பேருக்கு தலா ரூ.200 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் வணிக நிறுவனங்கள், கடைகளுக்கு செல்லும் வாடிக்கையாளர்கள், கடை உரிமையாளர்கள் அனைவரும் கண்டிப்பாக முக கவசம் அணிந்து இருக்கவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.
Tags:    

Similar News