செய்திகள்
மழை

மாவட்டத்தில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு- ஆராய்ச்சி நிலையம் தகவல்

Published On 2020-12-02 09:57 GMT   |   Update On 2020-12-02 09:57 GMT
நாமக்கல் மாவட்டத்தில் நாளை முதல் 2 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக ஆராய்ச்சி நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் மூன்று நாட்கள் நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அடுத்த 3 நாட்கள் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். இன்று மழைக்கு வாய்ப்பு இல்லை. நாளை (வியாழக்கிழமை) 30 மி.மீட்டரும், நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) 10 மி.மீட்டரும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. காற்று மணிக்கு முறையே 8, 10, 6 கி.மீ. வேகத்தில் வடக்கு திசையில் இருந்து வீசும். வெப்ப நிலையை பொறுத்தவரை அதிகபட்சமாக 86 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 69.8 டிகிரி ஆகவும், காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக 95 சதவீதம் ஆகவும், குறைந்தபட்சமாக 55 சதவீதமாகவும் இருக்கும்.

சிறப்பு வானிலையை பொறுத்தவரையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். பல இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இந்த வானிலையில் இளம் கால்நடைகளை குளிர்ந்த காற்றில் இருந்து காக்க தரையில் வைக்கோல் மற்றும் பக்கவாட்டுச் சுவரில் கோணி துணியை கட்டி வைக்க வேண்டும். இது உடல் வெப்பநிலை குறையாமல் இருக்க உதவும். இதேபோல் மழையால் தேங்கிய நீரை கால்நடைகள் குடிக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும். இவ்வாறு தேங்கிய தண்ணீரின் மூலம் நோய்கள் பரவும் வாய்ப்பு உள்ளது. மேலும் தண்ணீரை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து பயன்படுத்த வேண்டும்.

மேலும் தற்போதைய வானிலை கறவை மாடுகளில் மடி வீக்கம் உருவாக்கும் காரணிகளை அதிகப்படுத்தும் என்பதால் பால் கறப்பதற்கு முன்பும், கறந்த பின்பும், ஒரு சதவீதம் பொட்டாசியம் பெர்மாங்கனேட் கரைசல் கொண்டு காம்பை கழுவ வேண்டும். நாட்டுக்கோழிகளில் புற ஒட்டுண்ணிகளை கட்டுப்படுத்த மூலிகை மருத்துவ முறைகளை கையாள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News