செய்திகள்
பணம்

இ.சி.எல்.ஜி.எஸ். திட்டத்தில் 13,150 ஏற்றுமதியாளர்களுக்கு ரூ.1,580 கோடி கடன்

Published On 2020-12-02 07:17 GMT   |   Update On 2020-12-02 07:17 GMT
மத்திய அரசின் இ.சி.எல்.ஜி.எஸ். திட்டத்தில் 13 ஆயிரத்து 150 ஏற்றுமதியாளர்களுக்கு ரூ.1,580 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
திருப்பூர்:

பின்னலாடை நகரமான திருப்பூரில் ஆடை தயாரிப்பு பிரபலம். இதனால் இங்கிருந்து தினமும் பல கோடி ரூபாய்க்கு ஆடைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதுபோல் உள்நாட்டு வர்த்தகமும் நடைபெற்று வருகிறது. இதனால் பின்னலாடை தொழில் மூலம் மத்திய, மாநில அரசுகளுக்கு அதிகளவு வருவாய் கிடைத்து வருகிறது.

இதன் காரணமாக பின்னலாடை தொழிலை மேலும் வளர்ச்சி பெற செய்ய பல்வேறு சலுகைகள் மற்றும் திட்டங்களையும் அரசுகள் அறிவித்து வருகின்றன. அந்த வகையில் ஏற்றுமதியாளர்களின் நிதி பிரச்சினைகளை தீர்க்கும் வகையில், மத்திய அரசு இ.சி.எல்.ஜி.எஸ். எனும் திட்டத்தை வழங்கி வருகிறது. இந்த திட்டம் மூலம் திருப்பூர் மாவட்டத்தில் தற்போது 13 ஆயிரத்து 150 ஏற்றுமதியாளர்கள் பயனடைந்துள்ளனர்.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

கொரோனா பிரச்சினை உள்பட நிதி பிரச்சினைகளில் சிக்கி தவித்து வருகிற ஏற்றுமதியாளர்கள் மற்றும் தொழில்துறையினரை ஊக்குவிக்க இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் ஏற்கனவே ஏற்றுமதியாளர்கள் பெற்றிருக்கும் கடன் தொகையில் இருந்து கூடுதலாக 20 சதவீதம் பிணையம் இல்லாத கடன் அவர்களுக்கு வழங்கப்படும். இதற்கான உத்தரவாதத்தை வங்கிகளுக்கு மத்திய அரசு வழங்கும். இதன் மூலம் நிதி பிரச்சினைகளில் சிக்கி தவிக்கிறவர்கள் தங்களது நிறுவனத்தை மீண்டும் புத்துணர்ச்சி பெற செய்ய முடியும்.

அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்தில் 16 ஆயிரத்து 346 பேர் இந்த கடன் தொகை பெற விண்ணப்பித்திருந்தனர். இதில் முறையான ஆவணங்கள் இருந்த 13 ஆயிரத்து 150 ஏற்றுமதியாளர்களுக்கு ரூ.1,580 கோடி கடன் தொகை வழங்கப்பட்டு, அவர்களும் பயனடைந்துள்ளனர். மேலும், மீதமுள்ள ஏற்றுமதியாளர்களுக்கும் அவர்களது விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. விடுபட்ட அல்லது தேவையான ஆவணங்களை கேட்டு வருகிறோம். அவை கிடைத்தவுடன் அவர்களுக்கும் கடன் வழங்கப்படும். இதுபோல் இந்த கடன் தொகை செலுத்தும் காலமும் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Tags:    

Similar News