செய்திகள்
தொப்பூர் கணவாய் இரட்டைப்பாலம் அருகே லாரி கவிழ்ந்து கிடப்பதை படத்தில் காணலாம்.

தொப்பூர் கணவாயில் அடுத்தடுத்து லாரி-கார்கள் மோதல் : டிரைவர்கள் உள்பட 28 பேர் காயம்

Published On 2020-11-30 18:15 GMT   |   Update On 2020-11-30 18:15 GMT
தொப்பூர் கணவாயில் அடுத்தடுத்து லாரி-கார்கள் மோதிய விபத்துகளில் டிரைவர்கள் உள்பட 28 பேர் காயம் அடைந்தனர்.
நல்லம்பள்ளி:

ஐதராபாத்தில் இருந்து ரெயில்வே உதிரி இரும்பு பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி மதுரைக்கு புறப்பட்டது. இந்த லாரியை தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த பிரதாப் (வயது 40) என்பவர் ஓட்டி வந்தார். அவருடன், திருச்சி மாவட்டத்தை சேர்ந்த கிளீனர் குமார் (38) என்பவர் உடன் வந்தார். தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் பகுதியில் நேற்று முன்தினம் இரவு சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி, முன்னால் சென்ற கார் மீது மோதி இரட்டைப்பாலம் தடுப்பு சுவரில் மோதியது.

இந்த விபத்தில் லாரி டிரைவர் பிரதாப், கிளீனர் குமார் மற்றும் காரில் வந்த திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த பாலசுப்ரமணியன் (40) ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தொப்பூர் போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து படையினர் விரைந்து சென்று 3 பேரையும் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதேபோல் நேற்று அதிகாலை சென்னையில் இருந்து இரும்பு துகள் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி, தொப்பூர் கணவாய் வழியாக வந்து கொண்டிருந்தது. இந்த லாரியை வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை சேர்ந்த தீனதயாளன் (37) என்பவர் ஓட்டி வந்தார். கணவாயை கடந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய லாரி முன்னால் சென்று கொண்டு இருந்த 7 கார்கள் மீது அடுத்தடுத்து மோதியது. இதில் லாரி டிரைவர் மற்றும் கார்களில் வந்த 20 பேர் காயம் அடைந்தனர். அவர்களை போலீசார் மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதேபோல் கொல்கத்தாவில் இருந்து ஈரோட்டிற்கு எள்ளு பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி, தொப்பூர் கணவாய் வழியாக நேற்று வந்து கொண்டிருந்தது. இந்த லாரியை திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பாண்டி (30) என்பவர் ஓட்டி வந்தார். இந்த லாரி தொப்பூர் கணவாயில் சென்றபோது சென்னையில் இருந்து கோவைக்கு பர்னிச்சர் பாரம் ஏற்றிகொண்டு முன்னால் சென்ற லாரி மற்றும் கார் மீது மோதியது. இந்த விபத்தில் பர்னிச்சர் ஏற்றி வந்த லாரி தொப்பூர் இரட்டை பாலம் அருகே கவிழ்ந்தது.

இந்த விபத்தில் லாரி டிரைவர்கள் மற்றும் காரில் வந்த 2 பேர் உள்பட 4 பேர் காயம் அடைந்தனர். தொப்பூர் போலீசார் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தொடர் விபத்தால் தொப்பூர் கணவாயில் விடிய,விடிய போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்தால் பாளையம் சுங்கச்சாவடியில் இருந்து தொப்பூர் கணவாய் இடையே உள்ள சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலையில் அணிவகுத்து நின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.

தொப்பூர் கணவாயில் அடுத்தடுத்து நடந்த விபத்துகளில் டிரைவர்கள் உள்பட 28 பேர் காயம் அடைந்தனர். இந்த தொடர் விபத்துகள் குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News