7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்பில் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விக் கட்டணத்திற்காக 16 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.
7.5 சதவீத உள் ஒதுக்கீடு: அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விக் கட்டணத்திற்கு ரூ. 16 கோடி ஒதுக்கீடு
பதிவு: நவம்பர் 30, 2020 22:49
தமிழக அரசு அரசாணை
மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து ஆளுநரும் அதற்கு ஒப்புதல் அளித்தார். அதன்படி அரசுப் பள்ளிமாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் தனியார் கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்பட்டது.
ஆனால் தனியார் கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்பட்ட மாணவர்கள் அவர்களுக்கான கல்விக் கட்டணத்தை எவ்வாறு செலுத்த முடியும் என கேள்வி எழுந்தது. அதனைத்தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின் தனியார் கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்பட்ட அரசு பள்ளி மாணவர்களின் கல்விக் கட்டணத்தை திமுக ஏற்கும் என கூறினார்.
அதனைத்தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் இடம்பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என்று கூறினார். அதன்படி தற்போது சுயநிதி மருத்துவக்கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்பட்ட 184 மாணவர்களின் கல்விக்கு ரூ.15.85 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அரசு மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரிகளில் 215 மாணவர்களின் கல்விக்கு 3.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக மருத்துவ சேவை கழகத்தின் மூலம் உருவாக்கிய சுழல் நிதி மூலம் இக்கல்விக்கட்டணத்தை அரசு செலுத்த உள்ளது.
Related Tags :