செய்திகள்
திருச்சியில் ஏங்கல்ஸ் உருவப்படத்திற்கு முத்தரசன் மலர் தூவி மரியாதை செய்த காட்சி.

நாட்டில் பாசிச கொள்கையை நிலை நிறுத்த பா.ஜனதா முயற்சி- முத்தரசன் குற்றச்சாட்டு

Published On 2020-11-29 11:10 GMT   |   Update On 2020-11-29 11:10 GMT
ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற திட்டத்தின் மூலம் நாட்டில் பாசிச கொள்கையை நிலைநிறுத்த பா.ஜனதா முயற்சிப்பதாக முத்தரசன் குற்றஞ்சாட்டினார்.
திருச்சி:

திருச்சி மிளகுபாறையில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் நேற்று காலை சோசலிச சிந்தனையாளர் ஏங்கல்சின் 200-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஏங்கல்ஸ் பிறந்த நாளான இன்று (அதாவது நேற்று) சோசலிச கொள்கையை நாடு மற்றும் உலகம் முழுவதும் எடுத்துச்செல்ல சபதமேற்று உள்ளோம். இந்தியாவில் மதவெறி சக்திகள் தலைதூக்கி இருக்கிறது. ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே தேர்தல், என்று இறுதியில் ஒரே கட்சி, ஒரே ஆட்சி என்ற சர்வாதிகாரத்தை நோக்கி பாசிச கொள்கையை நிலைநிறுத்த பாரதீய ஜனதா கட்சி தொடர்ந்து முயற்சித்து வருகிறது.

இது ஜனநாயகத்துக்கும், நாட்டுக்கும் பேராபத்தானது. இதனை முறியடிக்க, ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ள அனைவரும் இந்திய அரசியலமைப்பு கொள்கையை ஏற்றுக்கொண்டவர்கள், மதசார்பற்ற கொள்கையாளர்கள் ஒன்று திரண்டு போராட முன்வரவேண்டும். நம் நாட்டில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் தேர்தல் நடத்தப்படுகிறது.

1967-ம் ஆண்டு வரை இந்தியாவிலும் ஒரே தேர்தல் தான் நடைமுறையில் இருந்தது. பின்னர் ஏற்பட்ட ஆட்சி கவிழ்ப்பு போன்ற பல்வேறு காரணங்களால் அந்த திட்டம் கைவிடப்பட்டது. இதில் சாதக, பாதகங்கள் இருக்கலாம். ஆனால், மத்திய பாரதீய ஜனதா அரசின் நோக்கம் வேறு என்பதே எங்களுடைய நிலைப்பாடு.

மருத்துவத்துறையில் உயர் கல்விக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்து, அதை சென்னை உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது. ஆனால் இன்றைக்கு மத்திய அரசின் நிற்பந்தத்தின் காரணமாக இந்த ஆண்டு 50 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த இயலாது என்று கூறியுள்ளது. நாட்டில் இட ஒதுக்கீடு இருக்கக்கூடாது என்ற மோசமான நிலையை பாரதீய ஜனதா எடுத்துள்ளது. இது சமூக நீதிக்கு எதிரானது.

இதை எதிர்த்து நாம் போராட வேண்டும். மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிரான மூர்க்கத்தனமான யுத்தத்தை தொடுத்துள்ளது. விவசாயிகளுக்கு எதிரான இந்த 3 சட்டங்களையும் திரும்பப்பெறும் வரை விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வார்கள்.

இவ்வாறு அவர் கூறினார். 

பேட்டியின்போது திருச்சி மாவட்ட செயலாளர்கள் திராவிடமணி (மாநகர்), இந்திரஜித் (புறநகர்), மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News