செய்திகள்
வானிலை நிலவரம்

காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்தது- தென் மாவட்டங்களை நோக்கி நகர வாய்ப்பு

Published On 2020-11-29 08:05 GMT   |   Update On 2020-11-29 08:05 GMT
காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தென் தமிழக கடலோர பகுதியை நோக்கி நகரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தெற்கு அந்தமான், அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்தியரேகை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நேற்று நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து, இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதி மற்றும் இந்தியப் பெருங்கடலை ஒட்டிய பூமத்திய ரேகை பகுதியில் நிலை கொண்டுள்ளது.

அடுத்த 36 மணி நேரத்தில் மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, வரும் 2-ந்தேதி தென் தமிழக கடலோர பகுதியை நோக்கி நகரக்கூடும்.

இன்று மற்றும் நாளை தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

டிசம்பர் 1-ந்தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள் மற்றம் புதுவை காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

டிசம்பர் 2-ந்தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கன மழையும், தேனி,மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

டிசம்பர் 3-ந்தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தேனி, விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும, ஏனைய கடலோர மாவட்டங்கள் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் சேலான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியலை ஒட்டியும், குறைந்த பட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியலை ஒட்டியும் இருக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News