செய்திகள்
கனிமொழி எம்பி

சென்னை காப்பாற்றப்பட்டதற்கு புயல் வலுவிழந்ததே காரணம்- கனிமொழி எம்பி பேட்டி

Published On 2020-11-29 07:22 GMT   |   Update On 2020-11-29 07:22 GMT
சென்னை காப்பாற்றப்பட்டதற்கு புயல் வலுவிழந்ததே காரணம் என்று கோவையில் கனிமொழி எம்.பி. கூறினார்.
கோவை:

தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், தி.மு.க. மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. சேலத்தில் தேர்தல் பிரசாரத்தை இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்க உள்ளார். இதற்காக அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று கோவை வந்தார். அவருக்கு தி.மு.க.வினர் வரவேற்பு அளித்தனர்.

கோவை விமானநிலையத்தில் கனிமொழி எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னையில் கடந்த முறை வெள்ளம் வந்த போது அ.தி.மு.க. தான் ஆட்சியில் இருந்தது. அவர்கள், மீண்டும் ஆட்சிக்கு வந்த போதிலும் அந்த வெள்ளப்பாதிப்பில் இருந்து பாடம் கற்கவில்லை. எந்த குடிமராமத்து வேலையும் நடைபெறவில்லை. நீர்வழித்தடங்கள் தூர்வாரப்படாமல் உள்ளது. இந்த முறை சென்னை காப்பாற்றப்பட்டதற்கு புயல் வலுவிழந்ததே காரணம். இதனால் தான் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.

அரசு எடுத்த நடவடிக்கைகளால் பாதிப்புகள் குறையவில்லை. மறுபடியும் புயல், வெள்ளம் வரும் சூழலில், சென்னை தொடர்ந்து மிகப்பெரிய பாதிப்பு அடையும் நிலையில்தான் உள்ளது. இதற்கு நிரந்தர தீர்வு காண அரசு முன்னெடுக்க வேண்டும். ஆனால் அதை அரசு செய்வது இல்லை. இந்த ஆட்சிக்கு சுற்றுப்புற சூழலையோ, நீர்நிலைகளையோ பாதுகாக்கும் எண்ணம் இல்லை. கார்த்திகை தீபம் அன்று நான் பிரசாரத்தை தொடங்குவதாக நீங்கள் கூறுகிறீர்கள். தி.மு.க. பிரசாரத்தை தொடங்கி ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இந்த நாள், அந்த நாள் என்ற எந்த வேறுபாடும் எங்களுக்கு கிடையாது.

2ஜி வழக்கில் தீர்ப்பு வந்து விட்டது. அதில் குற்றம் நடைபெறவில்லை என்று நீதிபதி கூறிவிட்டார். பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலை தான் தி.மு.க.வின் நிலைப்பாடு. இது தொடர்பாக கவர்னருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு உள்ளது. பா.ஜனதா மற்றும் அ.தி.மு.க.வினர் சமூக வலைத்தளங்களில் தவறாக பிரசாரம் செய்து வருகின்றனர். வரும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறும். மு.க.ஸ்டாலின் தமிழக முதல்-அமைச்சராக பொறுப்பேற்பார்.

இவ்வாறு கனிமொழி எம்.பி. கூறினார்.

அப்போது நா.கார்த்திக் எம்.எல்.ஏ., தி.மு.க. சொத்து பாதுகாப்பு குழு துணைத்தலைவர் பொங்கலூர் பழனிசாமி, மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பையா கவுண்டர் என்ற கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து அவர் கார் மூலம் சேலத்திற்கு புறப்பட்டு சென்றார்.
Tags:    

Similar News