செய்திகள்
கோப்புபடம்

‘நிவர்’ புயலால் மழை: பெரம்பலூர் மாவட்டத்தில் 13 கூரை வீடுகள் சேதம்

Published On 2020-11-28 07:54 GMT   |   Update On 2020-11-28 07:54 GMT
‘நிவர்’ புயலால் பெய்த மழையில் பெரம்பலூர் மாவட்டத்தில் 13 கூரை வீடுகள் சேதமடைந்தன. அந்த வீடுகளின் உரிமையாளர்களுக்கு அரசின் நிவாரண தொகை, அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.
பெரம்பலூர்:

‘நிவர்’ புயல் காரணமாக பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 24, 25-ந் தேதிகளில் பரவலாக மழை பெய்தது. புயல் காரணமாக மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. மேலும் தாழ்வான பகுதிகள், திறந்த வெளி மற்றும் கூரை வீடுகளில் வசிப்பவர்கள் நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டனர். இதனால் மழைக்கு உயிர்ப்பலி ஏதும் ஏற்படவில்லை.

ஆனால் பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் தாலுகாவை தவிர, மற்ற தாலுகாக்களில் கூரை வீடுகளின் சுவர்கள் மழைக்கு இடிந்து விழுந்துள்ளன. குன்னம் தாலுகாவிற்கு உட்பட்ட பெருமத்தூர் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன், சிலம்பாயி, செல்லையா, பாப்பா மற்றும் கீழப்புலியூரை சேர்ந்த ஜோதி, துங்கபுரத்தை சேர்ந்த செல்வராஜ், வளர்மதி, பரவாயை சேர்ந்த பவுன், வசிஷ்டபுரத்தை சேர்ந்த முத்துச்சாமி, வடக்கலூரை சேர்ந்த சின்னசாமி ஆகியோரின் கூரை வீடுகள் சேதமடைந்தன.

இதேபோல, ஆலத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட கொட்டரை கிராமத்தை சேர்ந்த முத்துலட்சுமி, புஜங்கராயநல்லூரை சேர்ந்த கெங்கையம்மாள், வேப்பந்தட்டை தாலுகாவிற்கு உட்பட்ட அரும்பாவூர் பேரூராட்சியை சேர்ந்த பழனியாண்டி ஆகியோரின் கூரை வீடுகளும் மழைக்கு சேதமடைந்தன. மாவட்டத்தில் நிவர் புயல் காரணமாக பெய்த மழைக்கு மொத்தம் 13 பேரின் கூரை வீடுகள் சேதமடைந்துள்ளது.

இந்நிலையில் தமிழக அரசின் மாநில பேரிடர் மேலாண்மை நிதி உதவி திட்டத்தின் கீழ் பகுதி சேதமடைந்த வீடுகளை செப்பனிடவும், சீரமைக்கவும், மறுவேலை செய்வதற்கும் நிவாரணமாக ஒரு வீட்டிற்கு தலா ரூ.4 ஆயிரத்து 100 வீதம், அந்த தொகையை வீட்டின் உரிமையாளர் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.

மழை பெய்யும்போது பெரம்பலூர் தாலுகா திருநகரை சேர்ந்த பெரியசாமி என்பவரின் 2 பசு மாடுகள் மின்சாரம் பாய்ந்தும், குன்னம் தாலுகா கீழப்பெரம்பலூரை சேர்ந்த சேப்பெருமாள் என்பவரின் ஆடு சுவர் இடிந்து விழுந்ததாலும் இறந்துள்ளன.

உயிரிழந்த பசு மாடுகளின் உரிமையாளருக்கு ஒரு மாட்டிற்கு தலா ரூ.30 ஆயிரம் வீதம் 2 மாடுகளுக்கு ரூ.60 ஆயிரமும், ஆட்டின் உரிமையாளருக்கு ரூ.3 ஆயிரமும் இழப்பீடாக அவரவர் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டதாக மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்தார்.

Tags:    

Similar News