செய்திகள்
மதுரையில் ரெயில் நிலைய சாலையில் ஆறாக ஓடிய மழைநீரில் ஊர்ந்து சென்ற வாகனங்கள்

மதுரையில் 1 மணி நேரம் கனமழை

Published On 2020-11-28 04:12 GMT   |   Update On 2020-11-28 04:12 GMT
மதுரையில் நேற்று 1 மணி நேரம் கனமழை பெய்தது.
மதுரை:

மதுரையில் நேற்று இரவு திடீரென கனமழை பெய்தது. சுமார் 1 மணி நேரம் நீடித்த மழையால் நகரில் உள்ள முக்கிய சாலைகள், தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. குறிப்பாக பெரியார் பஸ் நிலைய பகுதி, கர்டர் பாலம், தெற்கு மாசி வீதி, கீழவாசல், ரெயில்வே ஸ்டேஷன் ரோடு, விளக்குத்தூண், மேலவெளி வீதி, எல்லீஸ் நகர் மெயின்ரோடு, கரும்பாலை, கீழ அண்ணாதோப்பு, மணிநகரம் உள்பட பகுதிகளில் தண்ணீர் அதிக அளவில் தேங்கி காணப்பட்டது. மழை காரணமாக நகரின் பல பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. இதனால் மக்கள் அவதி அடைந்தனர்.

திருப்பரங்குன்றம் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் மழை பெய்வதற்கான அறிகுறியே இல்லாத நிலை இருந்தது. ஆனால் இரவு 9 மணி அளவில் யாரும் எதிர்பாராத வகையில் திடீரென்று மழை பெய்தது. அதனால் ரோட்டில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கண்மாய்களில் தண்ணீர் வரத்து இருந்தது.

கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் நிலத்தடி நீர் பெருகி குடிதண்ணீர் தட்டுபாடு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் விவசாயிகள் வயல்களில் விவசாயப் பணியை தொடங்கி உள்ளனர். நாற்றுப் பாவுதல், நாற்று நடுதல், உழுதல், வரப்பு வெட்டுதல், களை பறித்தல் என்று பலருக்கு விவசாய வேலை கிடைத்துள்ளது.

இதேபோல் சோழவந்தான் பகுதியில் பலத்த காற்றுடன் நேற்று மழை பெய்தது. சோழவந்தான், திருவேடகம், தேனூர், மேலக்கால் உள்பட இப்பகுதியில் நேற்று மாலை முதல் இரவு வரை பலத்த காற்றுடன் மழை பெய்தது. சுமார் 1 மணி நேரம் பெய்த மழையால் சாலையில் வெள்ளம் போல் மழைநீர் ஓடியது. மேலும் தாழ்வான பகுதியில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது.
Tags:    

Similar News