செய்திகள்
கைது

பூட்டிக்கிடந்த வீட்டில் 30 பவுன் நகை கொள்ளை- 3 பேர் கைது

Published On 2020-11-28 03:03 GMT   |   Update On 2020-11-28 03:03 GMT
புயல் கரையை கடந்த நேரத்தில் பூட்டிக்கிடந்த வீட்டில் புகுந்து 30 பவுன் நகைகளை கொள்ளையடித்த 3 பேரை, புகார் கொடுத்த 3 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர்.
சென்னை:

சென்னை அசோக்நகர், 15-வது அவென்யூவில் வசிப்பவர் பார்த்தசாரதி (வயது 65). இவர் பிஸ்கட் கம்பெனி ஒன்றில் ஊழியராக வேலை செய்து ஓய்வு பெற்றவர். நிவர் புயல், மழை காரணமாக இவர் கடந்த 24-ந் தேதி அன்று தனது வீட்டை பூட்டிவிட்டு, பெசன்ட்நகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

இந்த நிலையில், புயல் கரையை கடந்த அன்று இரவு இவரது வீட்டுக்குள் கொள்ளை ஆசாமிகள் சிலர் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர், அவர்கள் வீட்டில் பீரோவில் இருந்த 30 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.1½ லட்சத்தை கொள்ளையடித்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர். விடாது பெய்த மழையிலும் கொள்ளையர்கள், இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி விட்டனர்.

புயல் கரையை கடந்த பிறகு, பார்த்தசாரதி தனது வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது தான் வீட்டில் நகை-பணம் கொள்ளை போனது அவருக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், இதுகுறித்து குமரன் நகர் போலீசில் புகார் கொடுத்தார். கூடுதல் கமிஷனர் தினகரன் உத்தரவின் பேரில், இணை கமிஷனர் ஏ.ஜி.பாபு, துணை கமிஷனர் விக்ரமன் ஆகியோர் மேற்பார்வையில், உதவி கமிஷனர் அனந்தராமன், இன்ஸ்பெக்டர்கள் ராஜேஸ்வரி, தீபக்குமார் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் அதிரடியாக களத்தில் இறங்கி விசாரணை நடத்தினார்கள்.

கண்காணிப்பு கேமரா உதவியுடன் கொள்ளையர்கள் பற்றி துப்பு துலக்கி புகார் கொடுத்த 3 மணி நேரத்தில் கொள்ளையர்கள் ராஜேஷ் (18), பிரகாஷ் (20), விக்கி (22) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களில் பிரகாஷ் மட்டும் பழைய குற்றவாளி. மற்ற இருவரும் தொழிலுக்கு புதியவர்கள். எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த இவர்களிடம் இருந்து 30 பவுன் நகைகள் மற்றும் ரொக்கப்பணத்தை போலீசார் மீட்டனர்.

கொள்ளையர்களை உடனடியாக கைது செய்த குமரன் நகர் போலீசாரை, கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் நேற்று தனது அறைக்கு நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார்.
Tags:    

Similar News