செய்திகள்
மாமல்லபுரம்

மாமல்லபுரத்தை அழகுபடுத்த எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது?- ஐகோர்ட்டு கேள்வி

Published On 2020-11-28 02:06 GMT   |   Update On 2020-11-28 02:06 GMT
மாமல்லபுரத்தை அழகுபடுத்துவதற்கு மட்டும் எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது என்று மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை:

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதிக்கு ஐகோர்ட்டு மூத்த நீதிபதி என்.கிருபாகரன் ஒரு கடிதம் எழுதினார். அதில், ‘தமிழர்களின் தொன்மை நகரமான, பல்லவர் கால கடற்கரை நகரமான மாமல்லபுரத்தை யுனெஸ்கோ கலாசார நகரமாக அறிவித்துள்ளது. இங்கு கலாசாரத்தை கெடுக்கும் கட்டுமானங்கள் கட்ட அனுமதிக்கக்கூடாது. குப்பை கொட்டினால் குறைந்தபட்சம் ரூ.1,000 அபராதம் விதிக்க வேண்டும். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் ஆங்கிலப் புலமை பெற்ற சுற்றுலா வழிகாட்டி குழுக்களை அமைக்க வேண்டும். அங்குள்ள புராதன சின்னங்களை பாதுகாக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த கடிதத்தையே மனுவாக ஏற்றுக்கொண்டு ஐகோர்ட்டு விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, எம்.எஸ்.ரமேஷ் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மத்திய அரசுத் தரப்பில், மாமல்லபுரம் போன்ற 16 சுற்றுலாத்தலங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக ரூ.5 ஆயிரத்து 109 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்புதலுக்காக காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், “மாமல்லபுரத்தை அழகுபடுத்துவதற்கு மட்டும் எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது?” என கேள்வி எழுப்பினர்.

இதுதொடர்பாக உரிய பதில் அளிக்காவிட்டால் சம்பந்தப்பட்ட மத்திய, மாநில அரசு செயலாளர்கள் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என்று மீண்டும் எச்சரிக்கை விடுத்தனர். மேலும் அடுத்த விசாரணைக்கு மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல், தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் ஆகியோர் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை டிசம்பர் 4-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
Tags:    

Similar News