செய்திகள்
மு.க.ஸ்டாலின்

மாணவர்களுக்கான கட்டணத்தை ஏற்க தி.மு.க. தயாராக இருக்கிறது- மு.க.ஸ்டாலின் அறிக்கை

Published On 2020-11-27 21:40 GMT   |   Update On 2020-11-27 21:40 GMT
அரசு பள்ளி மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அரசு சரி செய்ய நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று முக ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை:

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முகநூலில் கூறியிருப்பதாவது:-

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரும் சட்டமன்ற தீர்மானத்தின் மீது மத்திய அரசை நடவடிக்கை எடுக்கச்செய்யும் திறனற்ற அ.தி.மு.க. ஆட்சியாளர்கள், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத முன்னுரிமை இடஒதுக்கீட்டின் வழியாக ஒத்தடம் கொடுப்பதற்கு பதில் உபத்திரவம் கொடுக்கிறார்கள்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு தனியார் மருத்துவக்கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்படுவதால் அவர்களால் கட்டணம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது குறித்து ஏற்கனவே முதல்-அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளேன். ஆனால், அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதாக தெரியவில்லை. தனியார் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்த பொள்ளாச்சியைச் சேர்ந்த மாணவர் யுவன்ராஜ், கட்டணம் செலுத்த இயலாததால் கேட்டரிங் பணிகளுக்குச் சென்றுள்ளதாக நாளேட்டில் வெளியாகி உள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. அதுமட்டுமின்றி, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவிகள் கே.பிரித்திஷா, கு.விஜயலட்சுமி, எஸ்.பவானி ஆகியோரும் தனியார் கல்லூரிகளில் இடம் கிடைத்தும் கட்டணம் செலுத்த முடியாமல் தவிப்பதாக தகவல் வந்திருக்கிறது. இதுபோல மேலும் பல அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவே தகர்ந்து போகும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது பற்றிய தகவல்கள் வந்து கொண்டே இருக்கின்றன.

அரசு பள்ளி மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை சரிசெய்ய சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்திருந்தார். அரசு உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளாதது ஏன்? அரசு நினைத்தால் செய்ய முடியும். அப்படி இல்லாவிட்டால், மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரிகளில் இடங்களையாவது ஒதுக்கித்தாருங்கள். முன்னர் அறிவித்தபடி தி.மு.க. அந்த கட்டணத்தை ஏற்க தயாராக இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News