செய்திகள்
மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டிய நிலையில் அதன் தோற்றத்தை படத்தில் காணலாம்.

மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியது

Published On 2020-11-27 20:36 GMT   |   Update On 2020-11-27 20:36 GMT
மேட்டூர் அணை நீர்மட்டம் இந்த ஆண்டில் 4-வது முறையாக 100 அடியை எட்டியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேட்டூர்:

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக கடந்த ஜூன் மாதம் முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இவ்வாறு திறக்கப்படும் தண்ணீர் பாசன தேவைக்கேற்றவாறு அதிகரித்தோ அல்லது குறைத்தோ திறந்து விடப்பட்டு வருகிறது. மேலும் மழைக்காலங்களில் அணையில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக குறைக்கப்படும். மழை நின்றவுடன் மீண்டும் பாசனத்திற்கு தண்ணீர் தேவை அதிகரிக்கும் போது அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவும் அதிகரிக்கப்படும். இதன் காரணமாக மழை பெய்யும் போது, மேட்டூர் அணை நீர்மட்டம் மளமளவென்று உயர்ந்தும், மழை இல்லாத நேரங்களில் குறைந்தும் மாறி, மாறி நீர்மட்டம் இருந்து வருகிறது.

குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் ஏற்பட்ட நிகர் புயல் காரணமாக டெல்டா மாவட்டம் உள்பட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் தேவை மிகவும் குறைந்தது.இதனால் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 500 கனஅடியாகவும், கால்வாய் பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 250 கனஅடியாகவும் குறைக்கப்பட்டது. அணையில் இருந்து பாசனத்துக்காக திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்ட நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. குறிப்பாக நேற்று அணைக்கு வினாடிக்கு 8 ஆயிரத்து 111 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

நீர்வரத்து அதிகரிப்பால் கடந்த 4 நாட்களாக மேட்டூர் அணை நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து கொண்டே வந்தது. நேற்று மதியம் 100 அடியை அணை நீர்மட்டம் எட்டியது. இந்த ஆண்டில் 4-வது முறையாக மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதற்கு முன்பு செப்டம்பர் மாதம் 25-ந் தேதியும், அக்டோபர் மாதம் 13-ந் தேதியும், மீண்டும் அதே மாதத்தில் 24-ந் தேதியும் மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியதுடன், மீண்டும் 100 அடிக்கு கீழ் குறைந்தது. அதே நேரத்தில் கடந்த ஆண்டு தொடர் மழை காரணமாக மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை 4 முறை எட்டி நிரம்பியது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News