செய்திகள்
கைது

ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் இன்ஸ்பெக்டர் கைது

Published On 2020-11-27 07:17 GMT   |   Update On 2020-11-27 07:17 GMT
குற்றப்பத்திரிகையில் இருந்து பெயரை நீக்க ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுரை:

மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகே உள்ள இடமலைப்பட்டி பகுதியில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த அடிதடி வழக்கு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த நல்லதம்பி (வயது55) அவரது மகன்கள் மாரி, கண்ணன், சங்கரப்பாண்டி, கண்ணனின் மனைவி பொன்முத்துரேகா, அவரது மகன் கமல், சங்கரப்பாண்டி மனைவி உலகம்மாள் ஆகிய 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து நல்லதம்பி மற்றும் அவரது மகன் சங்கரப்பாண்டி ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் வெளியே வந்தனர்.

இந்த சம்பவத்தில் தொடர்பில்லாத தனது மகன் மாரி, பேரன் கமல் ஆகியோர்களது பெயர்களை குற்றப்பத்திரிகையில் இருந்து நீக்குமாறு நல்லதம்பி செக்கானூரணி பெண் இன்ஸ்பெக்டர் அனிதாவிடம் கேட்டார்.

அதற்கு இன்ஸ்பெக்டர் அனிதா ரூ.1 லட்சம் லஞ்சமாக தர வேண்டும் என கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு நல்லதம்பி ரூ.80 ஆயிரம் தருவதாக ஒப்புக்கொண்டார். முதல் கட்டமாக ரூ.30 ஆயிரம் கொடுப்பதாக கூறினார்.

இதைத்தொடர்ந்து லஞ்சம் கொடுக்க விரும்பாத நல்லதம்பி இதுபற்றி லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் ரசாயனம் தடவிய ரூ.30 ஆயிரத்தை நல்லதம்பியிடம் கொடுத்து அனுப்பினார்கள்.

அவர் அந்த பணத்தை இன்ஸ்பெக்டர் அனிதாவிடம் கொடுக்கும்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு சத்தியசீலன் தலைமையிலான போலீசார் இன்ஸ்பெக்டர் அனிதாவை கையும், களவுமாக மடக்கி பிடித்தனர். அவரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தினர்.

மதுரையில் லஞ்சம் வாங்கி பெண் இன்ஸ்பெக்டர் கைதான சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News