செய்திகள்
சேதமடைந்த பாலம்

பரமக்குடி அருகே சேதமடைந்த பாலத்தில் பயணிக்கும் கிராம மக்கள்

Published On 2020-11-26 13:46 GMT   |   Update On 2020-11-26 13:46 GMT
பரமக்குடி அருகே சேதமடைந்த பாலத்தில் கிராம மக்கள் பயணம் செய்து வருகின்றனர். இந்த பாலத்தை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பரமக்குடி:

பரமக்குடி தாலுகா போகலூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது மென்னந்தி ஊராட்சி. இங்குள்ள நாகாச்சி, சின்ன நாகாச்சி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் ஏராளமான ஏக்கரில் நெல், மிளகாய், மல்லி, கடலை, என சீசனுக்கு ஏற்றவாறு அக்கிராம மக்கள் பயிரிட்டு பிழைத்து வருகின்றனர். அந்த கிராமத்திற்கு செல்லும் வகையிலும், விவசாய பொருட்களை கொண்டு வருவதற்கு வசதியாகவும், சின்ன நாகாச்சிக்குட்பட்ட வயல் வெளி அருகே இடது பிரதான கால்வாயை கடந்து செல்ல வேண்டும்.

இதையடுத்து கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு அங்குள்ள கால்வாய் மீது பாலம் கட்டப்பட்டது.ஆனால் அந்த பாலம் தற்போது மிகவும் சேதம் அடைந்து தடுப்புச்சுவர்கள் உடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. பாலத்தின் கீழ் பகுதி உடைந்து சேதமாகி வாகனங்களில் செல்பவர்கள் விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது. அந்த பாலத்தை கடந்து செல்பவர்கள் அச்சத்துடன் கடந்து சென்று வருகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் அந்த பாலத்தை கடந்து செல்ல அப்பகுதி மக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர்.

இந்த பாலத்தின் வழியாகத்தான் விவசாய நிலங்களில் நெல் அறுவடை செய்ய எந்திரம், டிராக்டர் மற்றும் விளைந்த பொருட்களை ஏற்றி வருவதற்கான சரக்கு வாகனங்கள் சென்று வருகின்றன. தற்போது தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் இந்த பாலம் மேலும் சேதமடைந்து மிகவும் மோசமானநிலையில் உள்ளது. எனவே பெரும் விபத்து ஏற்பட்டு உயிர் பலி ஏற்படும்முன் இந்த பாலத்தை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News