செய்திகள்
புதுச்சேரி அருகே இன்று ‘நிவர்’ புயல் கடந்து செல்ல இருக்கும் பாதையை காட்டும் வரைபடம்.

இன்று கரையைக் கடக்கிறது ‘நிவர்’ புயல் : தமிழகம், புதுச்சேரி கடலோர பகுதியில் உச்சகட்ட உஷார்

Published On 2020-11-24 20:28 GMT   |   Update On 2020-11-24 20:28 GMT
‘நிவர்’ புயலை எதிர்கொள்ள தமிழகம், புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் உச்சகட்ட முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
சென்னை:

வங்க கடலில் உருவாகி உள்ள நிவர் புயல் அதிதீவிர புயலாக மாறிவருகிறது.

இந்த புயலை எதிர்கொள்ள தமிழக அரசு பல்வேறு முன்எச்சரிக்கைகளை எடுத்து இருக்கிறது. கடலோர பகுதி முழுவதும் உஷார் படுத்தப்பட்டு இருக்கிறது.



நிவர் புயலையொட்டி,தமிழகத்தில் மாவட்டந்தோறும் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு மையங்களை கண்காணிக்கும் பணியினையும், பொதுமக்கள் குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்யும் பணிகளையும் சென்னை எழிலகத்தில் உள்ள மாநில பேரிடர் அவசர கட்டுப்பாட்டு மையம் முழுவீச்சில் மேற்கொண்டு வருகிறது.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், முதன்மை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, நிர்வாக கமிஷனர் பணீந்திர ரெட்டி மற்றும் அதிகாரிகள் குழுவினர் முகாமிட்டு இப்பணிகளை கண்காணித்து வருகின்றனர்.

இந்தநிலையில் பேரிடர் அவசர கட்டுப்பாட்டு மையத்தின் செயல்பாடுகளை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று மதியம் 3.40 மணியளவில் ஆய்வு செய்தார்.

கட்டுப்பாட்டு அறையில் பணியில் அமர்த்தப்பட்ட ஊழியர்களிடம் புயல் பாதிப்பு குறித்து எவ்வாறு தகவல்கள் பரிமாறப்படுகிறது? அவசர உதவிக்கேட்கும் மக்களுக்கு உடனடியாக உதவிகள் கிடைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறதா? என்று முதல்-அமைச்சர் கேட்டறிந்தார். அப்போது ஊழியர்கள் எழுந்து நின்று பதிலளிக்க முயன்றனர். ஆனால் முதல்- அமைச்சர், அவர்களிடம் நீங்கள் இருக்கையில் அமர்ந்தபடி கூறுங்கள் என்றார். காணொலிக்காட்சி மூலம் மற்ற மாவட்டங்களில் செயல்படும் வரும் கட்டுப்பாட்டு மையங்களையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடர்பு கொண்டு ஆலோசனை வழங்கினார்.

மாநில பேரிடர் அவசர கட்டுப்பாடு மையத்தில் ஆய்வுக்கு பின்னர், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறிதுநேரம் அங்கு ஆலோசனை மேற்கொண்டார்.

அதன்பின்னர் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நிவர் புயல் நாளை (இன்று) மாலை கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. நிவர் புயல் முன்எச்சரிக்கை நடவடிக்கை குறித்து அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் தேவையான அறிவுரைகள் வழங்கப்பட்டு இருக்கிறது. 4,134 இடங்கள் பாதிக்கப்படும் பகுதிகளாக கண்டறியப்பட்டு, அங்கு தனி கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. 3,144 இடங்களில் நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

தற்போது அரியலூர், கடலூர் உள்பட 9 மாவட்டங்களை சேர்ந்த தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 254 பேர் முதற்கட்டமாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி தயார் நிலையில் முகாம்கள் இருக்கிறது.

புயல் வருகிறபோது மக்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும். தேவையில்லாமல் வெளியே செல்லக்கூடாது. ஏற்கனவே புயல் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக 7 மாவட்டங்களில் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாளை (இன்று) தமிழகத்தில் அரசு விடுமுறை அளிக்கப்படுகிறது. அரசு அலுவலகங்கள் நாளை (இன்று) இயங்காது. அதேவேளை அத்தியாவசிய பணியில் ஈடுபடும் அலுவலர்கள் வழக்கம்போல பணிபுரிவார்கள். பின்னர் நிலைமைக்கு ஏற்ப என்ன நடவடிக்கைகளை கையாளுவது என அரசு முடிவு செய்யும். நிவர் புயலால் மக்கள் பாதிக்கக்கூடாது என்ற வகையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- பாசன ஏரிகளில் நீர் எவ்வளவு இருக்கிறது?

பதில்:- தமிழகத்தில் 14 ஆயிரத்து 139 பாசன ஏரிகள் உள்ளன. இதில் 1,519 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. மீதமுள்ள ஏரிகளில் வெவ்வேறு அளவுகளில் நீர் இருக்கிறது.

கேள்வி:- புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில்எந்தளவு களப்பணியாளர்கள் தயார் நிலையில் இருக்கிறார்கள்?

பதில்:- மரங்கள் சாய்ந்தால் அதனை அப்புறப்படுத்த பணியாளர்கள் தயார் நிலையில் இருக்கிறார்கள். எங்கு பாதிப்பு ஏற்பட்டாலும் அங்கிருக்கும் மக்களை பாதுகாக்கவும், மீட்கவும் அனைத்துத்துறை பணியாளர்களும் தயாராக இருக்கிறார்கள். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அரசு முழுவீச்சில் பணிகளை முடுக்கி விட்டிருக்கிறது. பாதிக்கப்படும் பகுதிகளில் மக்களை மீட்க 14,232 பெண்கள் உள்பட 43,400 முதல் நிலை மீட்பாளர்களும், கால்நடைகளை பாதுகாக்க 8,871 பேரும் தயார் நிலையில் இருக்கிறார்கள். சாலையில் விழும் மரங்களை அகற்ற 9,909 முதுநிலை மீட்பாளர்கள், பேரிடர் மீட்பு படையில் பயிற்சி பெற்ற 5,505 காவலர்கள், 691 ஊர்காவல் படையினர், 4,691 தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர், 9,853 பாதுகாப்பு பயிற்சி பெற்ற தன்னார்வலர்களும் தயார் நிலையில் இருக்கிறார்கள்.

3,094 கல்வி நிறுவனங்கள், 2,561 தொழிற்சாலைகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி நடத்தப்பட்டுள்ளது. 11,387 பாலங்கள், 1,09,808 சிறுபாலங்களில் பழுதுகள் மற்றும் அடைப்புகள் நீக்கப்பட்டுள்ளன. சாலைகளில் மழைநீர் தேங்காமல் எளிதாக செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.

தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாக்கும் பொருட்டு 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. மேலும் பள்ளி, கல்லூரிகள், திருமண மண்டபங்களும் தயார்நிலையில் இருக்கின்றன. 3,905 மரம் அறுக்கும் எந்திரங்கள், சாய்ந்த மரங்களை உடனடியாக அப்புறப்படுத்த 2,897 ஜே.சி.பி. எந்திரங்களும் தயாராகவே இருக்கின்றன.

நிவாரண முகாம்களில் மின்தடை ஏற்பட்டால் சமாளிப்பதற்காக 2,115 ஜெனரேட்டர் கள் தயார் நிலையில் உள்ளன. மழைநீர் தேங்காத வகையில் 483 அதிக திறன் கொண்ட பம்புகள், மீட்பு குழுக்கள் மற்றும் 108 ஆம்புலன்சுகள் 465 என்ற எண்ணிக்கையில் தயார் நிலையில் இருக்கின்றன.

கேள்வி:- புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு கிடைக்குமா?

பதில்:- பாதிக்கப்படுபவர்களுக்கு இழப்பீட்டு தொகை நிச்சயம் கொடுக்கப்படும்.

கேள்வி:- பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் உங்களிடம் என்ன பேசினார்?

பதில்:- தமிழகத்தில் புயல் என தகவல் வந்துள்ளது. அதற்கு மத்திய அரசு துணைநிற்கும். உங்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து தருவோம் என்று பிரதமர் நம்பிக்கை அளித்தார்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News