செய்திகள்
மாட்டுவண்டி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் மனு கொடுக்க வந்த போது எடுத்த படம்.

காவிரி ஆற்றில் மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதி வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு

Published On 2020-11-24 18:24 GMT   |   Update On 2020-11-24 18:24 GMT
காவிரி ஆற்றில் மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதி வழங்கக்கோரி கரூர் மாவட்ட பாரதீய மாட்டுவண்டி தொழிலாளர்கள் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
கரூர்:

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் திங்கட்கிழமைதோறும் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும். தற்போது கொரோனா பரவலை தடுக்க மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கலெக்டர் அலுவலகத்தில் கூட்டம் கூடுவதை தவிர்க்க அந்தந்த தாலுகா அலுவலகங்களில் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் புகார் பெட்டி வைத்து அதில் மனுக்கள் போட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

கரூர் மாவட்ட பாரதீய மாட்டுவண்டி தொழிலாளர்கள் சங்கத்தினர் மனு போட்டனர். அந்த மனுவில், கரூர் மாவட்ட பாரதீய மாட்டுவண்டி தொழிலாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் மாட்டுவண்டியின் மூலம் மணல் எடுத்து கிராமத்தின் பல்வேறு கட்டுமான பணிகளுக்கு கொடுத்து தங்கள் குடும்ப வாழ்க்கையையும், மாடுகளையும் காப்பாற்றி வாழ்ந்து வந்து கொண்டிருக்கிறோம். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் மணல் அள்ள அனுமதி வழங்கப்படவில்லை. எங்களின் வாழ்வாதாரமும், மாடுகளையும் காப்பாற்ற போராடி வருகிறோம். ஆகையால் தாங்கள் எங்களின் நிலை கருதி மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதி வழங்க ஆவனம் செய்ய வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இதேபோல், மாயனூர் வட்டார மாட்டுவண்டி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் அதன் தலைவர் பாலதண்டாயுதபாணி போட்ட மனுவில், எங்கள் சங்கத்தில் 300-க்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். எங்களின் வாழ்வாதாரம் மாயனூர் கிராம பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் மாட்டு வண்டி மூலம் எங்கள் பகுதியில் உள்ள மணலை அரசு அனுமதியுடன் அள்ளி விற்பனை செய்து வந்தோம். இந்நிலையில் மாயனூர் கிராம பகுதியில் மாட்டுவண்டிகளில் மணல் அள்ள கூடாது என அரசு அதிகாரிகள் தடுத்து விட்டனர். இதனால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றோம். இதனால் எங்களுக்கு மணல் அள்ள அனுமதி வழங்க வேண்டும். எங்களது வாழ்வாதாரத்தை காப்பாற்ற வழிவகை கிடைக்கவில்லை என்றால், வேறு வழியின்றி நாங்களும், எங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்களும் மற்றும் மாட்டுவண்டியுடன் பிழைப்பு நடத்தும் அனைவரும் அடுத்த மாதம் (டிசம்பர்) 22-ந்தேதி தமிழக முதல்-அமைச்சரை சந்தித்து எங்களுடைய வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு, குடும்ப அட்டை ஆகியவற்றை திரும்ப கொடுக்க போகிறோம் என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

கரூர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் ஒன்றிய பொதுச்செயலாளர் பாலமுருகன் போட்ட மனுவில் கூறியிருப்பதாவது, புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சிக்கு உட்பட்ட ஆதிதிராவிடர் தெருவில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

அந்த பகுதியில் அனைத்து கழிவு குப்பைகளும், மருத்துவ கழிவுகளும் மற்றும் கறிக்கடை கழிவுகளும் கொட்டப்படுவதாலும், அந்த கழிவுகளுக்கு தீ வைப்பதால், காலனியில் உள்ள மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் மூச்சு திணறல் ஏற்படுகிறது.

மழைகாலங்களில் மழைநீர் கழிவுகளை அடித்துக்கொண்டு சாலையின் ஓரமாக தேங்குகிறது. இதனால் பல நோய்களினால் தளவாபாளையம் காலனி மக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.

மேலும் இந்த கழிவுகளால் துர்நாற்றம் வீசுகிறது. அதனால் அந்த குப்பைகளை உடனடியாக அகற்றி தர வேண்டும். என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
Tags:    

Similar News