செய்திகள்
மழை கால மீட்பு உபகரணங்களை மாவட்ட தீயணைப்பு அலுவலர் அனுஷியா பார்வையிட்ட போது எடுத்தபடம்.

தீயணைப்பு படை வீரர்கள் விடுப்பின்றி பணியாற்றுவார்கள்- மாவட்ட அலுவலர் அனுஷியா தகவல்

Published On 2020-11-24 14:39 GMT   |   Update On 2020-11-24 14:39 GMT
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு படை வீரர்கள் விடுப்பின்றி பணியாற்றுவார்கள் என மாவட்ட அலுவலர் அனுஷியா கூறினார்.
திருவாரூர்:

திருவாரூர் மாவட்டத்தில் நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புயல், மழை காலத்தில் தீயணைப்பு வீரர்களின் பணி முக்கியமானது. மீட்பு பணிகளில் அதிக சிரத்தை எடுத்து தீயணைப்பு வீரர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றுவார்கள்.

தற்போது புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் திருவாரூர் தீயணைப்பு நிலையத்தில் மீட்பு உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதை மாவட்ட தீயணைப்பு அலுவலர் அனுஷியா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 12 தீயணைப்பு நிலையங்களில் பணியாற்றும் 130 வீரர்களும் இன்று (நேற்று) முதல் புயல், மழை பாதிப்பு குறையும் வரை தொடர்ந்து 24 மணி நேரமும் விடுப்பின்றி பணியில் ஈடுபடுவார்கள்.

மழை, வெள்ள காலங்களில் மீட்பு பணிகளுக்கு தேவையான உபகரணங்களை ஆய்வு செய்து தயார் நிலையில் வைத்துள்ளோம். பொதுமக்கள் 101 என்ற எண்ணை அவசர உதவிக்கு அழைக்கலாம். எந்தவித பாதிப்புகளையும் எதிர்கொள்ள திருவாரூர் மாவட்ட தீயணைப்புத்துறை தயாராக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது தீணைப்பு நிலைய அலுவலர் வெங்கடேசன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News