செய்திகள்
தென்மண்டல வானிலை மைய இயக்குனர் பாலசந்திரன்

நிவர் புயல்- நாளை கனமழைக்கு வாய்ப்புள்ள 8 மாவட்டங்கள்

Published On 2020-11-24 08:30 GMT   |   Update On 2020-11-24 08:30 GMT
நிவர் புயல் காரணமாக 8 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:

தென்மண்டல வானிலை மைய இயக்குனர் பாலசந்திரன் கூறியிருப்பதாவது:

“ நிவர் புயல் நாளை மாலை புதுச்சேரி அருகே தீவிர புயலாக கரையை கடக்கும். புயல் கரையை கடக்கும் நேரத்தில் புதுவை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும்.

கடற்கரை பகுதிகளில் கடல் அலைகள் இயல்பை காட்டிலும் 2 மீட்டர் வரை கூடுதலாக உயர்ந்து கடல் கொந்தளிப்புடன் காணப்படும். இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.

நாளை புயல் கரையை கடக்கும்போது செங்கல்பட்டு, கடலூர், நாகை, விழுப்புரம், மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்களில் 100 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளது.

மேலும் புயல் காரணமாக வரும் 27-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரியில் மழை பெய்யும். நாகை, மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்களில் இன்று அதிகனமழை பெய்யும்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், தஞ்சை, திருவாரூர், புதுச்சேரியில் இன்று நிவர் புயல் காரணமாக மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

அதேபோல் திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களிலும், புதுச்சேரி காரைக்கால் பகுதிகளிலும் நாளை இடி மின்னலுடன் கூடிய அதீத கனமழை பெய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News