செய்திகள்
எல் முருகன்

தமிழகத்தை இருளில் மூழ்கடித்த தி.மு.க. விடியல் பயணம் நடத்துவதா?- எல்.முருகன்

Published On 2020-11-24 07:30 GMT   |   Update On 2020-11-24 07:30 GMT
தமிழகத்தை இருளில் மூழ்கடித்த தி.மு.க. விடியலை நோக்கி பயணம் மேற்கொள்வது வியப்பை ஏற்படுத்துகிறது என்று பா.ஜ.க. மாநில தலைவர் முருகன் தெரிவித்தார்.
பழனி:

பழனியில் வேல் யாத்திரை மேற்கொள்ள பா.ஜ.க. மாநில தலைவர் முருகன் தலைமையில் நிர்வாகிகள் வந்தனர். அவர்களை கோவில் செயல் அலுவலர் கிராந்திகுமார் பதி வரவேற்றார். மலைக்கோவிலில் மூலவர் சன்னதியில் வேலை வைத்து வழிபாடு நடத்தி தருமாறு பா.ஜ.க. நிர்வாகிகள் கேட்டனர். அதற்கு கோவில் நிர்வாகம் மறுத்து விட்டது.

பின்னர் திருஆவினன்குடி கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். அதன் பிறகு திரளான பா.ஜ.க. நிர்வாகிகள் மத்தியில் மாநில தலைவர் முருகன் பேசியதாவது:-

கருப்பர் கூட்டம் என்னும் கயவர் கூட்டத்துக்கு பாடம் கற்பிக்கவும், பிரதமர் மோடியின் திட்டங்களை நாட்டு மக்களுக்கு கொண்டு செல்லவும், கொரோனா முன் களப்பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கவும் வேல் யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது.

கருப்பர் கூட்டத்தையும், கயவர் கூட்டத்தையும் காவிக்கூட்டம் கண்டிப்பாக விரட்டும். தி.மு.க.வினர் காணும் கனவு, கனவாகவே இருக்கும். 2016-ம் ஆண்டுக்கு முன்பு மின்சாரம் இல்லாமல் தமிழகத்தையே இருளில் தத்தளிக்கவைத்த தி.மு.க.வினர் இன்று விடியலை நோக்கி என்று பிரசாரம் நடத்துகின்றனர். இது பொதுமக்களுக்கும், அரசியல் கட்சியினருக்கும் வியப்பை ஏற்படுத்துகிறது.

உ.பி.யில் ஒரு பெண்ணுக்கு ஏற்பட்ட பிரச்சனை குறித்து கனிமொழி ஆவேசமாக கருத்து தெரிவித்தார். ஆனால் தி.மு.க. எம்.எல்.ஏ. பூங்கோதை அவர்களது கட்சியினர் காலில் விழுந்து கதறி அழும் காட்சிகள் வெளியாகியுள்ளது. 2ஜி வழக்கு தினமும் நீதிமன்றத்தில் நடப்பதை மக்களிடம் மறைக்கவே தி.மு.க. திசை திருப்பும் செயலில் ஈடுபட்டு வருகிறது. ஆங்கில புத்தாண்டு, கிறிஸ்துமஸ், ரம்ஜான் பண்டிகைக்கு விடுமுறை அளிப்பதை போல தைப்பூசத்துக்கும் விடுமுறை அளிக்க வேண்டும். பழனியை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். பழனி வழியாக அதிக ரெயில்கள் இயக்கப்பட வேண்டும் என்றார்.

இதனையடுத்து வேல் யாத்திரை தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார், முருகன், துணை தலைவர்கள் நரேந்திரன், அண்ணாமலை, பொதுச் செயலாளர்கள் ஸ்ரீனிவாசன், கருப்பு முருகானந்தம், மாவட்ட தலைவர் கனகராஜ், பொதுச் செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட 800 பேரை கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் இரவு 10 மணிக்கு அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
Tags:    

Similar News