செய்திகள்
கோப்புப்படம்

அடுக்குமாடி குடியிருப்புகளில் உருவாகும் சமுதாய நூலகம் - திருச்சியில் விண்ணப்பிக்க தொடங்கினர்

Published On 2020-11-23 18:07 GMT   |   Update On 2020-11-23 18:07 GMT
அடுக்குமாடி குடியிருப்புகளில் சமுதாய நூலகம் உருவாகிறது. இதற்காக திருச்சியில் விண்ணப்பிக்க தொடங்கியுள்ளனர்.
திருச்சி:

ஒவ்வொரு நூலகம் திறக்கப்படும்போது ஒரு சிறைச்சாலையின் கதவுகள் மூடப்படுகிறது என்று சொல்வார்கள். ஆலயம் இல்லாத ஊரில் மட்டுமல்ல நூலகம் இல்லாத ஊரிலும் குடியிருக்கக்கூடாது என்பார்கள். நூலகங்கள் நம் அறிவின் மிகப்பெரிய தேடல் வெளி.

ஆனால் இப்போது சமூக மாற்றத்தால் நூலகங்களுக்கு சென்று படிப்போரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. காரணம் செல்போன்களின் ஆதிக்கம். இப்போது குழந்தைகள் கூட கைகளில் செல்போன்களை வைத்து நீண்ட நேரம் செலவிட்டு வருகிறார்கள்.

இது ஒருவிதமான ஆபத்து என்று மருத்துவர்கள் எச்சரிக்கை செய்தும் கூட பல வீடுகளில் குழந்தைகள் கையில் செல்போன்கள் இருப்பதை காணமுடிகிறது. சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு புத்தகங்களை படிக்கும் ஆர்வத்தை பெற்றோர் ஏற்படுத்த வேண்டும். அது அந்த குழந்தையின் சிறந்த எதிர்காலத்திற்கு அடித்தளமாக அமையும். அந்த வகையில் தமிழக அரசு வீடெங்கும் வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்கும் விதமாக குடியிருப்பு வளாகங்களில் சமுதாய நூலகம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்தப்படும் என அறிவித்தது. கடந்த மார்ச் மாதம் சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வி மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்தில் அமைச்சர் செங்கோட்டையன் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.

அதில், தமிழகத்தில் உள்ள பல்வேறு அடுக்குமாடி குடியிருப்புகளில் சமுதாய நூலகம் அமைக்கப்படும் என்றும், இதற்காக குடியிருப்புவாசிகள் தரப்பில் இருந்து குறைந்தபட்சம் வைப்பு தொகையாக ரூ.20 ஆயிரம் செலுத்த வேண்டும் என்றும், அடுக்குமாடி குடியிருப்பிலேயே நூலகம் செயல்படுவதற்கான அறை மற்றும் தளவாட பொருட்கள் வழங்கும் பட்சத்தில் அருகில் உள்ள பொது நூலகங்கள் மூலம் அங்கு புத்தகங்கள் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவித்து இருந்தார். அதன்பிறகு கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இந்தநிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு நூலகங்களில் இருந்து அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது. அதில் சமுதாய நூலகம் அமைக்க விரும்பும் அடுக்குமாடி குடியிருப்போர் முன்வைப்பு தொகை செலுத்தி, அந்த குடியிருப்பு வளாகத்திலேயே நூலகத்தை அமைத்துக்கொள்ளலாம். மேலும், அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திற்கு அருகே உள்ள பொதுநூலகத்திலிருந்து குடியிருப்பு வளாகத்தில் உள்ள நூலகத்திற்கு தேவையான நூல்கள் அனுப்பி வைக்கப்படும். நூல்கள் அனைத்தும் படித்து முடித்தபிறகு அந்த நூல்கள் திருப்பி எடுத்துக்கொள்ளப்பட்டு, மீண்டும் புதிய நூல்கள் வைக்கப்படும்.

இதன் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள குழந்தைகளுக்கு செல்போன் மூலம் பொழுதைக் கழிக்கும் நேரம் குறைந்து புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் ஏற்படும். முதியவர்களும் பெரும்பாலான நேரங்களில் வேண்டிய நூல்களைப் படித்து பொழுதை கழிக்க ஒரு வாய்ப்பாக அமையும். இந்தத் திட்டம் திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும் பரவலாக விரிவுபடுத்தப்படும் போது, அதற்கு நல்ல பலனைக் கொடுக்கும்.

இதுகுறித்து மாவட்ட மைய நூலக அலுவலர் சிவகுமாரிடம் கேட்டபோது, “அடுக்குமாடி குடியிருப்புகளில் அமைக்கப்படும் சமுதாய நூலகத்தை அந்த குடியிருப்புவாசிகள் தரப்பிலேயே பொறுப்பு ஆட்களை நியமித்து பராமரித்துக்கொள்ள வேண்டும். தற்போது தென்னூர் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் சமுதாய நூலகம் அமைக்க கடிதம் கொடுத்து விண்ணப்பித்துள்ளனர். அதற்காக தனியாக இடம் ஒதுக்கி முன்வைப்பு தொகையும் செலுத்தியுள்ளனர். இதையடுத்து அங்கு விரைவில் நூலகம் தொடங்க உள்ளோம்” என்றார்.
Tags:    

Similar News