செய்திகள்
ராஜஸ்தான் வெங்காயத்தை படத்தில் காணலாம்.

திருப்பூர் தென்னம்பாளையம் சந்தைக்கு ராஜஸ்தானில் இருந்து 25 டன் வெங்காயம் வந்தது

Published On 2020-11-23 09:57 GMT   |   Update On 2020-11-23 09:57 GMT
திருப்பூர் தென்னம்பாளையம் சந்தைக்கு ராஜஸ்தானில் இருந்து 25 டன் பெரிய வெங்காயம் விற்பனைக்கு வந்துள்ளது. ஒரு கிலோ ரூ.70-க்கு விற்பனை செய்யப்பட்டது.
திருப்பூர்:

சமையலில் முக்கிய பங்கு வகிப்பது வெங்காயம் ஆகும். பெரும்பாலான உணவு பொருட்களில் வெங்காயத்தின் பயன்பாடு அதிகமாக இருப்பதால், பலரும் சின்ன மற்றும் பெரிய வெங்காயத்தை அதிகளவு வாங்குவார்கள். திருப்பூரை பொறுத்தவரை வெங்காயம் உள்பட காய்கறிகள் வாங்குவதற்குபல்லடம் ரோட்டில்தென்னம்பாளையத்தில் சந்தை உள்ளது.

இந்த சந்தைக்கு செல்கிறவர்கள் இவற்றை வாங்கி செல்வார்கள். தென்னம்பாளையம் சந்தையில் ஏராளமான மொத்த மற்றும் சில்லரை வியாபாரிகள் பெரிய மற்றும் சின்ன வெங்காயத்தை விற்பனை செய்து வருகிறார்கள்.

சமீபத்தில் வெங்காயத்தின் விலை உயர்ந்து காணப்பட்டது. இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து வெங்காயம் வரவழைக்கப்பட்டது. இதற்கிடையே தற்போது தென்னம்பாளையம் சந்தைக்கு ராஜஸ்தானில் இருந்து 25 டன் பெரிய வெங்காயம் நேற்று விற்பனைக்காக கொண்டுவரப்பட்டது.

இது குறித்து வெங்காய வியாபாரிகள் கூறியதாவது:-

தென்னம்பாளையம்சந்தையை பொறுத்தவரை மகாராஷ்டிரா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பெரிய வெங்காயத்தை வாங்கி விற்பனை செய்து வந்தோம். தற்போது அந்த பகுதிகளில் வெங்காயத்தின் சீசன் முடியும் நிலையில் உள்ளதால், பெரிய வெங்காயத்தின் நிறம் வெளிப்புறம் மங்கலாக இருக்கிறது.இதனால் இது பொதுமக்கள் மற்றும் சூப்பர் மார்க்கெட் வைத்திருப்பவர்களிடையே ஒரு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் நல்ல நிறத்துடன் இருக்கும் ராஜஸ்தான் வெங்காயத்தை வாங்கி விற்பனை செய்து வருகிறோம். இந்த பெரிய வெங்காயத்திற்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்த வெங்காயம் ஒரு கிலோ ரூ.60 முதல் ரூ.70 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதுபோல் எகிப்து வெங்காயம் விலை குறைந்துள்ளது. ஒரு கிலோ எகிப்து வெங்காயம் தற்போது ரூ.45 முதல் ரூ.50 வரையும், சின்ன வெங்காயமும் ரூ.100-ல் இருந்து ஒரு கிலோ ரூ.75-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர்கள்கூறினார்கள்.
Tags:    

Similar News