செய்திகள்
பா.ஜ.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்ட காட்சி

பிரதமர் மோடி குறித்து அவதூறு: பா.ஜ.க.வினர் சாலை மறியல் - 5 பெண்கள் உள்பட 25 பேர் கைது

Published On 2020-11-22 13:51 GMT   |   Update On 2020-11-22 13:51 GMT
கரூர் அருகே பிரதமர் மோடி குறித்து அவதூறு பரப்பிய தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சாலை மறியலில் ஈடுபட்ட 25 பேரை போலீசார் கைது செய்தனர்.
கரூர்;

கரூர்-திண்டுக்கல் சாலையில் உள்ள ஒரு சுவரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரதமர் மோடி குறித்து அவதூறு பரப்பிய தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ஜ.க.வினர் கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் மனு அளித்தனர்.

அதன்பேரில் போலீசார் தி.மு.க.வினர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் கரூர்- திண்டுக்கல் சாலையில் உள்ள ஒரு சுவரில் பிரதமர் மோடி குறித்து எழுதப்பட்டிருந்த வாசகத்தை பா.ஜ.க.வினர் நேற்று அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டதால் போலீசார் குவிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து கரூர் வெங்கமேட்டிலும் பிரதமர் குறித்து எழுதப்பட்டிருந்த வாசகத்தை பா.ஜ.க.வினர் பெயிண்ட் கொண்டு அழித்தனர். இதேபோன்று பல்வேறு இடங்களில் பிரதமர் குறித்து எழுதப்பட்டிருந்ததை கண்டித்தும், தி.மு.க.வினரை கைது செய்ய வலியுறுத்தியும் மாவட்ட தொழிற்சங்க பிரிவு தலைவர் செல்வராஜ் தலைமையில், மாவட்ட இளைஞரணி தலைவர் கணேசமூர்த்தி உள்பட ஏராளமான பா.ஜ.க.வினர் வெங்கமேடு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு வந்த போலீசார் அவர்களிடம் சாலை மறியலை கைவிடுமாறு கூறினர். ஆனால் அவர்கள் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டதால், 5 பெண்கள் உள்பட 25 பேரை கைது செய்து போலீஸ் வேனில் அழைத்து சென்றனர்.

இந்த சம்பவம் கரூரில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News