செய்திகள்
கைது

முதல்-அமைச்சர் உருவபொம்மை எரிப்பு: திமுக நகர துணை செயலாளர் உள்பட 2 பேர் கைது

Published On 2020-11-22 12:27 GMT   |   Update On 2020-11-22 12:27 GMT
தஞ்சையில், முதல்-அமைச்சரின் உருவபொம்மையை எரித்தது தொடர்பாக தி.மு.க. நகர துணை செயலாளர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 5 பேரை தேடி வருகிறார்கள்.
தஞ்சாவூர்:

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி தி.மு.க. சார்பில் தேர்தல் பிரசாரத்தை இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேற்று முன்தினம் நாகை மாவட்டம் திருக்குவளையில் தொடங்கினார். அவரை போலீசார் கைது செய்தனர். உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சையில், தி.மு.க.வினர் மறியலில் ஈடுபட்டதோடு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உருவ பொம்மையை தீ வைத்து எரித்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க. இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் சண்.ராமநாதன், மாநகர நகர துணை செயலாளர் நீலகண்டன், ஒன்றிய செயலாளர் அருளானந்தசாமி உள்பட 110 பேரை மேற்கு போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.

இந்நிலையில் நேற்று காலை தி.மு.க. நகர துணை செயலாளர் நீலகண்டன், 19-வது வட்ட செயலாளர் ராமசந்திரன் உள்ளிட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

முதல்-அமைச்சரின் உருவ பொம்மை எரிப்பு, போக்குவரத்துக்கு இடையூறு செய்தல், அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் இந்த வழக்கில் 43-வது வட்ட பிரதிநிதி வைரமுத்து, லியோ உள்ளிட்ட 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News