செய்திகள்
கமல்ஹாசன்

தமிழக காவலர்களுக்கு ஒரு நாள் விடுப்பு முறை - கமல்ஹாசன் பாராட்டு

Published On 2020-11-22 11:15 GMT   |   Update On 2020-11-22 11:15 GMT
தமிழக காவலர்களுக்கு ஒரு நாள் விடுப்பு முறை குறித்த அறிவிப்பிற்கு, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
சென்னை:

தமிழகத்தில் காவலர்களுக்கு ஒரு நாள் விடுப்பு அளிப்பது குறித்து தமிழக சட்டம் ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ், அனைத்து காவல் கண்காணிப்பாளர்கள், மற்றும் காவல் ஆணையர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் காவலர்கள் பணியாற்றும் நேரம், விடுப்பு முறை மற்றும் பணி நாள் குறித்து பல்வேறு ஆலோசனைகள் நடத்தப்பட்டன. 

இதனையடுத்து காவலர்களுக்கு பணி விதிகள்படி வாரத்தில்  6 நாள் வேலை பார்த்தால், ஒரு நாள் விடுப்பு வழங்க  தமிழக காவல்துறை திட்டமிட்டுள்ளது. அதிலும் குறிப்பாக கொரோனா காரணமாகவும், உடல்நிலை சரியில்லாமலும், மன உளைச்சல் காரணமாக காவலர்கள் அதிகம் உயிரிழப்பதை தடுக்க, வார விடுப்பை கட்டாயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வாரத்தில் ஏதாவது ஒரு நாள் விடுப்பும், ஞாயிற்றுக்கிழமை விடுப்பை சுழற்சி முறையில் கொடுக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் இது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில், கடமையைச் செய்பவர்களுக்கு ஓய்வு கொள்ளவும், உழைப்பைக் கொடுப்பவர்களுக்கு இளைப்பாறவும் உரிமை உண்டு என்று கூறியுள்ளார். சுழற்சி முறையிலோ வேறு விதத்திலோ பிற அரசு ஊழியர்கள் போல் காவல் துறையினருக்கும் ஓய்வு கொடுக்க முன் வந்துள்ளது பாராட்டுக்குரியது என்றும் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார். இது வெறும் பேச்சாய் இல்லாமல் நடைமுறைப் படுத்தப்படவும் வேண்டும் என்று அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News