செய்திகள்
அமித்ஷா

தமிழ்நாட்டுக்கு கொண்டுவந்த திட்டங்களை தி.மு.க. பட்டியலிட தயாரா?- மத்திய மந்திரி அமித்ஷா சவால்

Published On 2020-11-22 02:38 GMT   |   Update On 2020-11-22 10:45 GMT
காங்கிரஸ் கூட்டணியில் 10 ஆண்டுகள் இருந்தபோது, தமிழ்நாட்டுக்கு கொண்டுவந்த திட்டங்களை தி.மு.க. பட்டியலிட தயாரா? என்று மத்திய மந்திரி அமித்ஷா சவால் விட்டுள்ளார்.
சென்னை:

சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடைபெற்ற கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை புதிய நீர்த்தேக்கம் மக்களுக்கு அர்ப்பணிக்கும் விழாவும், மெட்ரோ ரெயில் 2-வது திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்துகொண்டு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இங்கே முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் இருக்கிறார்கள். அவர்கள் ஆட்சிக்கு நாங்கள் பாறையை போல பக்கத்துணையாக, உறுதுணையாக இருப்போம். நாட்டிலேயே 2 இடங்களில் உத்தரபிரதேசம், தமிழ்நாட்டில் பாதுகாப்பு வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. சாகர்மாலா திட்டத்தின்படி ரூ.2.25 லட்சம் கோடி, துறைமுகத்திற்கு ரூ.1 கோடியே 35 ஆயிரமும், சாலைகளுக்காக ரூ.57 ஆயிரம் கோடியும் அளிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் ரூ.12 ஆயிரத்து 460 கோடி செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. தேஜஸ் எக்ஸ்பிரஸ் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர். பெயர் சூட்டப்பட்டுள்ளது.

தி.மு.க. தலைவர்கள் அடிக்கடி தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு அநீதி இழைத்துள்ளது என்று கூறுவார்கள். நான் சென்னைக்கு வந்திருக்கிறேன், அவர்களிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும். 10 ஆண்டுகாலம் மத்திய அரசில் நீங்கள் அங்கம் வகித்தீர்கள். நீங்கள் இதுவரை தமிழ்நாட்டிற்கு என்ன செய்து இருக்கிறீர்கள் என்பதை பட்டியலிடுங்கள்?. எங்கள் தரப்பில் பணிவுடன் தெருவில் நின்று கொண்டு பட்டியல் கொடுக்க நான் தயாராக இருக்கிறேன். நீங்கள் அதற்கு பதில் கொடுக்க தயாரா?.

ஒரே ஒரு புள்ளி விவரம் மட்டும் இங்கே அளிக்க விரும்புகிறேன். 2013-2014-ம் நிதியாண்டுக்கான வரவு - செலவு திட்ட அறிக்கையிலே தமிழகத்திற்கு காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு ரூ.16 ஆயிரத்து 155 கோடியை ஒதுக்கீடு செய்தது. கடந்த வரவு-செலவு திட்டத்திலேயே ரூ.35 ஆயிரத்து 850 கோடியை நாங்கள் ஒதுக்கியிருக்கிறோம். திட்டங்களுக்கு தனியாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தமிழ்நாட்டிற்கு ரூ.4,500 கோடி கொடுக்கப்பட்டுள்ளது. 108 டன் அளவிலான உணவு தானியங்கள் கடந்த 4 மாதங்களிலேயே வழங்கப்பட்டுள்ளது. ரூ.3.36 கோடி அளவிலான பருப்பு வகைகள் இதே காலக்கட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது. 1.83 கோடி பேரின் ஜன்தன் கணக்கில் ரூ.9.1 ஆயிரம் கோடி பரிவர்த்தனைகள் நடந்துள்ளது.

தமிழகத்தில் தொழில்துறை வளர்ச்சி ஆகட்டும், கட்டமைப்பு, உள்கட்டமைப்பு ஆகட்டும், ஏழைகளின் நலன் ஆகட்டும், பா.ஜ.க. அரசு, எடப்பாடி பழனிசாமி அரசுக்கு, தமிழ்நாட்டு மக்களுடன் தோளுடன் தோள் நின்று உறுதுணையாக இருப்போம். நீண்ட காலத்திற்கு பிறகு வந்ததால் நான் அரசியல் பற்றியும் பேச விரும்புகிறேன். நரேந்திரமோடி அரசியல் களத்திற்கு வந்தபோது 3 வாதத்திற்கு எதிராக போர் கொடி உயர்த்தினார். அதில் வெற்றியும் பெற்றார். ஒன்று ஊழல் வாதம், குடும்ப அரசியல், சாதிய அரசியல். இதில் குடும்ப அரசியல் இங்கே நடத்தி வரும் சில கட்சிகளுக்கும், அவர்களை போலவே நாடு முழுவதும் குடும்ப அரசியல் நடத்திக் கொண்டிருக்கும் கட்சிகளுக்கும் மக்கள் சரியான பாடத்தை புகட்டிக்கொண்டு இருக்கிறார்கள். அதே பாடம் தமிழ்நாட்டிலும் புகட்டப்படும் என்ற உறுதியான நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

ஒரு விஷயம் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி ஆட்சியில் 2ஜி அலைக்கற்றை உள்பட பல்வேறு ஊழல்களை செய்தார்கள். ஆனால், இன்று ஊழலுக்கு எதிராக பேசுகிறார்கள். ஊழலுக்கு எதிராக பேச அவர்களுக்கு என்ன அருகதை இருக்கிறது. ஊழல் குற்றச்சாட்டை நீங்கள் வைப்பதற்கு முன்பாக தயவுசெய்து உங்கள் குடும்பத்தை சற்று திரும்பி பாருங்கள். அதற்கு பிறகு எது ஊழல், எது ஊழல் இல்லை என்பது உங்களுக்கு தெரியும்.

ஏழைகளின் நலனில் மோடி அரசு கவனம் செலுத்துகிறது. தமிழக மீனவர்கள் இன்றைக்கு அச்சம் இல்லாமல் இருக்கிறார்கள். ஒருவருக்குக்கூட பாதிப்பு என்று வந்து கேட்கவில்லை. உலக நாடுகள் இந்தியாவை பார்க்கும் கண்ணோட்டத்தையே மோடி மாற்றி அமைத்து இருக்கிறார். இலங்கை யாழ்ப்பாணத்தில் 50 லட்சம் தமிழர்களுக்கு வீடு கட்டி கொடுத்தார். மோடியால் இந்தியாவிற்கு நன் மதிப்பு ஏற்பட்டுள்ளது. மோடி ஆட்சியில் இந்தியா பாதுகாப்பாக இருக்கிறது.

நம்முடைய பாதுகாப்பு படையினர் சதிவேலையில் ஈடுபட முயன்ற தீவிரவாதிகளை சுட்டுக்கொன்றார்கள். மோடி அரசு பாதுகாப்பு படையினரின் தன்னம்பிக்கையை அதிகரித்து இருக்கிறது. அவர்களுக்கு தலை வணங்குகிறேன். இந்தியா மோடி தலைமையில் வீர நடைபோடுகிறது. வரும் காலங்களில் முன்னணி நாடுகளில் நாம் இருப்போம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. சிறப்பான திட்டங்களை நிறைவேற்றி கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்திற்கு மீண்டும் பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News