செய்திகள்
சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

Published On 2020-11-22 02:27 GMT   |   Update On 2020-11-22 08:20 GMT
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வுபகுதி உருவானது. தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு (நாளை முதல்) கனமழைக்கான வாய்ப்பு இருக்கிறது என்றும், தீவிர தாழ்வு மண்டலமாக வருகிற 25-ந் தேதி (புதன்கிழமை) தமிழக கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
சென்னை:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து ஆங்காங்கே மழை பெய்துவருகிறது. அதிலும் கடந்த ஒரு வாரமாக தென் மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. மழை காரணமாக தமிழகத்தில் இருக்கும் பெரும்பாலான ஏரிகள், குளங்கள் நிரம்பி வருகின்றன.

அதன் தொடர்ச்சியாக தற்போது வங்க கடலில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருக்கிறது. இதன் காரணமாக தமிழகத்தில் நாளை (திங்கட்கிழமை) முதல் 3 நாட்களுக்கு சில இடங்களில் கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் என்.புவியரசன் கூறியதாவது:-

தெற்கு வங்க கடலின் மத்திய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிவிட்டது. அடுத்த 48 மணி நேரத்தில் (24-ந் தேதிக்குள்) காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அதனை அடுத்த 24 மணி நேரத்தில் (25-ந் தேதி பிற்பகலுக்குள்) தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற இருக்கிறது. அது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து 25-ந் தேதி (புதன்கிழமை) தமிழக கடற்கரை நோக்கி வரக்கூடும்.

இதன் காரணமாக 22-ந் தேதி (இன்று) தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். 23-ந் தேதி (நாளை) தென் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், உள்மாவட்டங்களில் சில இடங்களில் லேசான மழையும், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

24-ந்தேதி (நாளை மறுதினம்) நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய அதி கனமழையும், கடலூர், மயிலாடுதுறை, சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

25-ந் தேதி (புதன்கிழமை) நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய அதி கனமழையும், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், மயிலாடுதுறை மாவட்டம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், ஏனைய மாவட்டங்களின் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

தென்மேற்கு மற்றும் அதனையொட்டி மத்திய மேற்கு வங்க கடல் பகுதி, தமிழக கடலோர பகுதி மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் 23, 24-ந் தேதிகளில் மணிக்கு 65 கிலோ மீட்டர் வரையிலான வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும். அதேபோல், தென்மேற்கு மற்றும் அதனையொட்டி மத்திய மேற்கு வங்க கடல் பகுதி, தமிழக கடலோர பகுதி, மன்னார் வளைகுடா பகுதி மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் 25-ந் தேதி மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும். இதனால் மேற்சொன்ன பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில், பரமக்குடி 5 செ.மீ., கமுதி, தக்கலை, குலசேகரபட்டினம், மணியாச்சியில் தலா 3 செ.மீ., நாங்குநேரி, சிவகிரியில் தலா 2 செ.மீ. மழை பெய்துள்ளது.
Tags:    

Similar News