செய்திகள்
அமைச்சர் விஜயபாஸ்கர்

மருத்துவ படிப்பு கலந்தாய்வில் முறைகேடா?- அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்

Published On 2020-11-19 02:22 GMT   |   Update On 2020-11-19 02:22 GMT
மருத்துவ படிப்பு கலந்தாய்வில் முறைகேடு நடந்ததாக கூறப்பட்ட புகாருக்கு அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை:

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களின் 7.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு நடந்துள்ளது. விரிவான ஏற்பாடுகளை மக்கள் நல்வாழ்த்துறை செய்திருக்கிறது.

இந்த சிறப்பு திட்டத்தின்கீழ் 267 மாணவ-மாணவிகள் அழைக்கப்பட்டனர். பெற்றோரும், மாணவர்களும் கண்ணீர் மல்க தங்களது நன்றியை முதல்-அமைச்சருக்கு தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதனைத் தொடர்ந்து அமைச்சர் சி.விஜயபாஸ்கரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- மருத்துவ படிப்பில் சேர வெளிமாநிலத்தவர்கள் விண்ணப்பித்திருப்பதாக புகார் எழுந்துள்ளதே?

பதில்:- கலந்தாய்வை பொறுத்தமட்டில், ஏற்கனவே வெளிப்படை தன்மையுடன் ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டது. யார் என்ன ரேங்க்? என்று எளிதாக பார்த்துவிடலாம்.

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் வெளிப்படையான கலந்தாய்வு நடக்கிறது. சான்றிதழ் சரிபார்ப்புக்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுவாகவே 2 மாநிலங்களில் விண்ணப்பிக்க உரிமை உண்டு. இருப்பிட சான்றிதழ் என்பதை ஒரு மாநிலத்தில் தான் கோரமுடியும். திறந்தவெளி போட்டியில் யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். ஆனால் இருப்பிட சான்றிதழ் என்பது குறைந்தபட்சம் இங்கே 7 ஆண்டுகள் படித்திருக்க வேண்டும், அதற்கான சான்றிதழ் வேண்டும், பெற்றோர் தமிழகத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

இதையெல்லாம் ஆய்வு செய்யத்தான் கொரோனா காலத்திலும் இந்த கலந்தாய்வு நேரடியாக நடக்கிறது. 0.0001 சதவீதம் கூட பிரச்சனை நடந்துவிடக்கூடாது, சந்தேகம் வந்துவிடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறோம். விதிமுறைகள், வழிமுறைகள், நெறிகாட்டு முறைகள் தெளிவாகவே இருக்கிறது. மருத்துவர் ஆவது எனும் கனவை ஏழை-எளிய மாணவர்களுக்கு முதல்- அமைச்சர் நிஜமாக்கும் நடவடிக்கையில் இறங்கியிருக்கிறார். மாணவர், பெற்றோர் எண்ண ஓட்டத்தை புரிந்துகொண்டு இந்த மேலான நடவடிக்கையை அவர் செய்திருக்கிறார். கூலி தொழிலாளர்கள் தங்களது பிள்ளைகளுடன் கலந்தாய்வில் கலந்துகொண்டதை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது.

கேள்வி:- இடஒதுக்கீட்டில் முறைகேடு செய்து வருபவர்கள் கண்டறிந்தால் நடவடிக்கை எடுக்கப்படுமா?

பதில்:- அதற்கு தான் குழு அமைக்கப்பட்டுள்ளது. மிக சிறப்பாக கலந்தாய்வு நடந்துள்ளது. எந்த விதமான சிறு சந்தேகங்களுக்கும் இடமில்லை. விளக்கம் பெறவும் ஹெல்ப் டெஸ்க் (உதவி மையம்) உள்ளது.

மேற்கண்டவாறு அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பதில் அளித்தார்.

மருத்துவ படிப்பு கலந்தாய்வில் இடங்களை தேர்வு செய்தவர்களுக்கு மாணவர் சேர்க்கை ஆணை வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் வரவேற்று பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், ‘முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எல்லோருக்கும் மிகப்பெரிய கடவுளாக காட்சி தருகிறார். இன்னும் சொல்லப்போனால், வரம் தரும் சாமியாக, வாழ்வு தரும் சாமியாக, அருள் பாலிக்கக்கூடிய சாமியாக, மருத்துவ கல்வி கொடுக்கும் சாமியாக என எல்லாம் தரக்கூடியவராக இருக்கிறார். குறிப்பாக மருத்துவ படிப்புகளான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். என்ற ஞானப்பழத்தை தரக்கூடிய பழனிசாமியாக முதல்-அமைச்சர் உள்ளார். யாருமே கோரிக்கை வைக்காத நிலையில், அரசு பள்ளியில் படித்த முதல்-அமைச்சர் தான், அரசு பள்ளி மாணவர்கள், பெற்றோரின் எண்ணங்களை உணர்ந்து உள் ஒதுக்கீட்டை அறிவித்தார்’ என்று புகழாரம் சூட்டினார்.
Tags:    

Similar News