சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டிற்குள் புகுந்து 37 பவுன் நகை மற்றும் ரூ.70 ஆயிரம் கொள்ளை போன சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி அண்ணாமலையார் நகரைச் சேர்ந்தவர் நந்தகுமார் (வயது47), அச்சக அதிபர்.
இவர் மனைவி சித்ரா தேவி (40), மகன்கள் விஜய் (21), அர்ஜூன் கார்த்திக் (17) ஆகியோருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். இன்று அதிகாலை 3 மணிக்கு வீட்டிற்குள் யாரோ பொருட்களை உருட்டுவது போன்ற சத்தம் கேட்டது.
இதனை தொடர்ந்து நந்தகுமார் மற்றும் குடும்பத்தினர் கண்விழித்து பார்த்தனர். அப்போது அங்கு 4 மர்ம மனிதர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்களை பார்த்ததும் நந்தகுமார் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
அந்த 4 பேரும் நந்தகுமார், அவரது மனைவி சித்ராதேவி மற்றும் மகன்களை கட்டிப் போட்டு விட்டு பணம் எங்கே இருக்கிறது?என கேட்டுள்ளனர்.
தொடர்ந்து வீடு முழுவதும் சுற்றிய மர்ம மனிதர்கள் அங்கிருந்த பீரோவை திறந்து அதில் இருந்த ரூ.70 ஆயிரத்தை கொள்ளையடித்தனர். ஆங்கிலத்தில் மேலும் பணம் எங்கே இருக்கிறது? என 4 பேரும் கேள்வி கேட்டனர். வீட்டில் வேறு பணம் ஏதும் இல்லை. வங்கியில்தான் உள்ளது என நந்தகுமார் கூறினார்.
இதனை தொடர்ந்து கொள்ளையர்கள் சித்ரா தேவி அணிந்திருந்த 37 பவுன் நகைகள் மற்றும் அவரது மகன்கள் அணிந்திருந்த பிரேஸ்லெட் ஆகியவற்றை பறித்துக் கொண்டனர். பின்னர் அங்கிருந்து கொள்ளையர்கள் தப்பி சென்று விட்டனர்.
அதே பகுதியில் 8-வது தெருவில் முருகன் என்பவரது வீடு உள்ளது. இவர் நகர் பகுதியில் உள்ள வீட்டில் வசிப்பதால் இந்த வீடு பூட்டப்பட்டு இருந்தது. கொள்ளையர்கள் பூட்டை உடைத்து உள்ளே சென்று அங்கிருந்த 6 பவுன் நகையை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
இந்த துணிகர கொள்ளை சம்பவங்கள் குறித்து சிவகாசி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்கள் வந்து கைரேகைகளை சேகரித்தனர்.
நந்தகுமார் வீட்டில் கொள்ளையடித்த 4 பேரும் ஆங்கிலத்தில், “வேரிஸ் மெனிமோர் அமவுண்ட்” என கேட்டிருக்கின்றனர். எனவே கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் பட்டதாரி வாலிபர்களாக இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.
கடந்த சில மாதங்களாகவே கொரோனா ஊரடங்கு காரணமாக ஏற்பட்ட வறுமையால் சிலர் திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. பிடிபட்ட சிலரும் இதனை உறுதி செய்துள்ளனர்.
அருப்புக்கோட்டை பகுதிகளில் வழிப்பறி, திருட்டு போன்ற சம்பவங்கள் அதிக அளவில் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்த சூழலில் தற்போது சிவகாசியில் வீடு புகுந்து கொள்ளை சம்பவம் நடைபெற்று இருப்பது பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த விசயத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீவிர நடவடிக்கை எடுத்து கொள்ளை சம்பவங்களை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.