செய்திகள்
கோப்புபடம்

தீபாவளியையொட்டி 2 நாட்களில் விழுப்புரம் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் ரூ.14½ கோடிக்கு மதுபானங்கள் விற்பனை

Published On 2020-11-17 12:54 GMT   |   Update On 2020-11-17 12:54 GMT
தீபாவளி பண்டிகையையொட்டி 2 நாட்களில் விழுப்புரம்- கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த மாவட்டத்தில் ரூ.14½ கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டது.
விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டத்தில் 120 டாஸ்மாக் கடைகளும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 102 டாஸ்மாக் கடைகளும் என ஒருங்கிணைந்த மாவட்டத்தில் 222 டாஸ்மாக் கடைகளும் மற்றும் 9 அரசு மதுபான கூடங்களும் உள்ளன. இந்த கடைகளில் தினமும் ரூ.2 கோடிக்கும் அதிகமாக மதுபானங்கள் விற்பனையாகி வருகின்றது.

விழுப்புரம் மாவட்டத்தின் அருகிலேயே புதுச்சேரி மாநிலம் இருப்பதாலும் மற்றும் கள்ளச்சந்தையில் மது விற்பனை போன்றவற்றை தாண்டியும் விழுப்புரம் மாவட்டம் டாஸ்மாக் விற்பனையில் முன்னிலையில் உள்ளது. பண்டிகை காலங்களில் வழக்கத்தைவிட மதுபானங்கள் விற்பனை அதிகமாக நடந்து வருகிறது.

அந்த வகையில் தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த 2 நாட்களில் மட்டும் ரூ.14½ கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது. அதாவது தீபாவளிக்கு முந்தைய நாளான கடந்த 13-ந் தேதியன்று பிராந்தி, விஸ்கி உள்ளிட்ட மது வகைகள் 8,670 அட்டைப்பெட்டிகளும், பீர் வகைகள் 5,306 அட்டைப்பெட்டிகளும் விற்றுத்தீர்ந்தன. இதன் மூலம் ரூ.6 கோடியே 63 லட்சத்து 81 ஆயிரத்து 220-க்கு மது வகைகள் விற்பனை ஆகியுள்ளது.

இதேபோல் தீபாவளி பண்டிகையான 14-ந் தேதியன்று பிராந்தி, விஸ்கி உள்ளிட்ட மது வகைகள் 8,885 அட்டைப்பெட்டிகளும், பீர் வகைகள் 11,298 அட்டைப்பெட்டிகளும் விற்று தீர்ந்தன. இதன் மூலம் ரூ.7 கோடியே 85 லட்சத்து 45 ஆயிரத்து 590-க்கு விற்பனையானது. ஆக மொத்தம் 2 நாட்களில் மட்டும் ரூ.14 கோடியே 49 லட்சத்து 26 ஆயிரத்து 810-க்கு மது வகைகள் விற்பனையானது.

கடந்த 2019-ம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாளான அக்டோபர் 26-ந் தேதியன்று பிராந்தி, விஸ்கி உள்ளிட்ட மது வகைகள் 8,300 அட்டைப்பெட்டிகளும், பீர் வகைகள் 6,157 அட்டைப்பெட்டிகளும் விற்றுத்தீர்ந்தன. இதன் மூலம் ரூ.5 கோடியே 40 லட்சத்து 61 ஆயிரத்து 640-க்கும், தீபாவளி பண்டிகையான அக்டோபர் 27-ந் தேதியன்று பிராந்தி, விஸ்கி உள்ளிட்ட மது வகைகள் 7,716 அட்டைப்பெட்டிகளும், பீர் வகைகள் 9,249 அட்டைப்பெட்டிகளும் விற்று தீர்ந்ததன் மூலம் ரூ.5 கோடியே 58 லட்சத்து 93 ஆயிரத்து 425-க்கும் ஆக மொத்தம் 2 நாட்களில் ரூ.10 கோடியே 99 லட்சத்து 55 ஆயிரத்து 65-க்கு மது வகைகள் விற்பனையானது.

இதனை ஒப்பிடுகையில் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு மதுபானங்களின் விற்பனை ரூ.3 கோடியே 29 லட்சத்து 4 ஆயிரத்து 315 அளவிற்கு கூடுதலாக விற்பனையாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News