செய்திகள்
வாக்காளர் பட்டியல்

தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு

Published On 2020-11-15 23:20 GMT   |   Update On 2020-11-15 23:20 GMT
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், இன்று காலை வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
சென்னை:

தமிழக சட்டசபை பொதுத் தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் நடக்க உள்ளது. தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை அனைத்துக் கட்சிகளும் தொடங்கி உள்ளன.

தேர்தல் கமிஷனும் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை தொடங்கி உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும், மாவட்ட கலெக்டர்களும், சென்னையில் மாநகராட்சி கமிஷனரும், மாவட்ட தேர்தல் அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில், தேர்தல் முறையாக நடக்க தவறில்லாத வாக்காளர் பட்டியல் அவசியம். எனவே, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி இன்று தொடங்க உள்ளது. அதற்காக, இன்று அனைத்து மாவட்டங்களிலும் காலை 10.30 மணிக்கு, சட்டசபை தொகுதி வாரியாக வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர்கள் வெளியிடுகின்றனர்.

இன்று முதல், டிசம்பர் 15-ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற விண்ணப்பிக்கலாம். பொதுமக்கள் வசதிக்காக இம்மாதம் 21, 22-ம் தேதிகளிலும், டிசம்பர் 12, 13-ம் தேதிகளிலும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும், வாக்காளர் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.

பொதுமக்கள் அளிக்கும் விண்ணப்பங்கள் மீது, ஜனவரி 5-ம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த ஆண்டு, ஜனவரி 20-ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். வரும் 2021 ஜனவரி 1ல் 18 வயது பூர்த்தியாவோர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். 

மாவட்ட தேர்தல் அலுவலர்கள் அந்த விண்ணப்பங்களை பரிசீலிப்பர். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்றம் செய்ய விண்ணப்பங்கள் அளிக்கலாம் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News