செய்திகள்
பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகையை படத்தில் காணலாம்.

திருச்சி பி.எஸ்.என்.எல். வளாகம் வாடகைக்கு விடப்படுகிறது - ஊழியர்கள் கலக்கம்

Published On 2020-11-15 22:30 GMT   |   Update On 2020-11-15 22:30 GMT
ஆட்கள் குறைப்பை தொடர்ந்து திருச்சி பி.எஸ்.என்.எல். வளாகம் வாடகைக்கு விடப்படுகிறது. இதனால் ஊழியர்கள் கலக்கமடைந்து உள்ளனர்.
திருச்சி:

மத்திய அரசின் தொலைத்தொடர்புத் துறையான பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் வர்த்தக ரீதியாக போட்டியிட முடியாமல் தவித்து வருகிறது. விருப்ப ஓய்வு என்ற பெயரில் சுமார் 85 ஆயிரம் ஊழியர்கள் ஏற்கனவே ஆட்குறைப்பு செய்யப்பட்டு விட்டனர்.

ஒப்பந்த ஊழியர்களுக்கு பல மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை. நிரந்தர ஊழியர்களுக்கு சம்பளம் காலதாமதமாக வழங்கப்பட்டு வருகிறது. சேவை குறைபாடு காரணமாக பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்கள் தங்களது இணைப்புகளை சரண்டர் செய்துவிட்டு தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களை நாடத்தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் ஆட்குறைப்பை தொடர்ந்து பி.எஸ்.என்.எல். வளாக கட்டிடங்களை வாடகைக்கு விடவும் மத்திய அரசு திட்டமிட்டு இருக்கிறது. திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் பி.எஸ்.என்.எல். முதன்மை பொது மேலாளர் அலுவலகம் உள்ளது. சுமார் 6 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த வளாகத்தில் 7 மாடி கட்டிடத்தில் தொலைத்தொடர்பு துறையின் பல்வேறு பிரிவு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.

திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்களுக்கு இந்த அலுவலகம் மண்டல அளவிலான தலைமை நிர்வாக அலுவலகமாக செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அலுவலகத்தின் பிரதான கேட்டில் ‘இந்த அலுவலக வளாகத்தில் உள்ள கட்டிடங்கள் வாடகைக்கு விடப்படும்‘ என்ற அறிவிப்பு பலகை தொங்க விடப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு பலகை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் கடுமையான ஒரு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசு நிறுவனமான இந்த வளாகத்திற்குள் தனியார்கள் வந்துவிட்டால் ஒரு பொதுத்துறை நிறுவனமான இதன் நிலைமை என்ன ஆகும்? பொதுமக்கள் எளிதாக வந்து செல்ல முடியுமா? என்ற கேள்விகள் அவர்களுடைய மனதில் எழுந்து உள்ளது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அகில இந்திய பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் சங்கத்தின் மாநில துணை செயலாளர் காமராஜ் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை புத்தாக்கம் செய்வது என்ற பெயரில் மத்திய அரசு சில முக்கிய முடிவுகளை எடுத்தது. அந்த முடிவுகளில் முக்கியமானது பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு 4ஜி அலைக்கற்றை வரிசை வழங்குவது, வளர்ச்சி திட்ட பணிகளை நிறைவேற்றுவதற்கு பொதுத்துறை வங்கிகள் கடன் கொடுக்க மத்திய அரசு உத்தரவாத சான்றிதழ் வழங்குவது, விருப்ப ஓய்வு வழங்க அனுமதி கொடுப்பது, நாடு முழுவதும் உள்ள பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு சொந்தமான கட்டிடங்களை வாடகைக்கு விட்டும், நிலங்களை விற்றும் நிதி திட்டங்களில் முதலீடு செய்வது என்பவையே இந்த முக்கியமான முடிவுகளாகும்.

ஆனால் தனியார் வர்த்தக போட்டியை சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு இதுவரை 4 ஜி அலைக்கற்றையை வழங்காமலும், வங்கிகள் கடன் கொடுப்பது சம்பந்தமான உத்தரவாத சான்றிதழை கொடுக்காமல் காலதாமதம் செய்து வரும் மத்திய அரசு, நிலங்களை விற்பதிலும், கட்டிடங்களை வாடகைக்கு விடுவதிலுமா மட்டுமே முனைப்பு காட்டி வருகிறது. அத்துடன் விருப்ப ஓய்வு திட்டத்தையும் தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு அதிகாரிகள் சங்கமும் ஊழியர்கள் சங்கமும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு சொந்தமான கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்களை அடிமாட்டு விலைக்கு விற்றுவிட்டு இந்த சேவை துறையை தனியாருக்குத் தாரை வார்ப்பது தான் இவர்களுடைய நோக்கமாகும். இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News