செய்திகள்
கோயம்பேட்டில் ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிந்த காட்சி.

கோயம்பேட்டில் 2 ஆம்னி பஸ்கள் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

Published On 2020-11-13 20:25 GMT   |   Update On 2020-11-13 20:25 GMT
கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையத்தில் நிறுத்தி இருந்த ஏற்கனவே தீ விபத்தில் சேதமடைந்த 2 ஆம்னி பஸ்கள் மீண்டும் தீப்பிடித்து எரிந்து நாசமாயின.
பூந்தமல்லி:

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரசு பஸ்களை இயக்குவது போன்று ஆம்னி பஸ்களும் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படுகிறது. கோயம்பேடு மார்க்கெட் அருகே வெளியூர்களுக்கு செல்லும் தனியார் ஆம்னி பஸ் நிலையம் உள்ளது.

இங்கு நாள்தோறும் 300-க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இரவு நேரங்களில் இங்கிருந்து வெளியூர்களுக்கு செல்வது வழக்கம். ஊரடங்கு காரணமாக ஆம்னி பஸ்கள் நீண்ட நாட்களாக அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

ஊரடங்கு தளர்வு காரணமாகவும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டும் ஆம்னி பஸ்கள் தற்போது இயக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆகஸ்டு மாதம் இங்கு நிறுத்தி வைத்து இருந்த 3 ஆம்னி பஸ்கள் அடுத்தடுத்து தீப்பிடித்து எரிந்து நாசமாயின. இதில் தீப்பிடித்து எரிந்த ஆம்னி பஸ்கள் அங்கேயே ஒரு ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. அதில் லேசாக எரிந்த நிலையில் இருந்த ஆம்னி பஸ் நேற்று மாலை திடீரென மீண்டும் தீப்பிடித்து எரிந்தது. தீ மளமளவென பரவி அருகில் நிறுத்தி இருந்த, ஏற்கனவே தீயில் எரிந்த மற்றொரு ஆம்னி பஸ்சிலும் தீப்பிடித்து கொண்டது. இதனால் அந்த பகுதியே கரும்புகை மண்டலமாக மாறியது.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த கோயம்பேடு தீயணைப்பு நிலைய அதிகாரி ராஜேந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், ஆம்னி பஸ்களில் எரிந்த தீயை அணைத்தனர். எனினும் ஏற்கனவே எரிந்த நிலையில் இருந்த 2 ஆம்னி பஸ்களும் முற்றிலும் எரிந்து நாசமாயின.

கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்படும் ஆம்னி பஸ்கள் அடிக்கடி தீப்பிடித்து எரியும் சம்பவம் அரங்கேறி வருகிறது. நாசவேலை காரணமாக இதுபோல் ஆம்னி பஸ்கள் தீப்பிடித்து எரிவதாகவும், போலீசார் இங்கு முறையாக ரோந்து பணியில் ஈடுபட்டால் மட்டுமே இதுபோன்ற சம்பவங்களை தடுக்க முடியும் எனவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

தீ விபத்துக்கான காரணம் குறித்து கோயம்பேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News