செய்திகள்
அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

அதிமுக அரசை யாராலும் அசைக்க முடியாது- அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

Published On 2020-11-13 04:12 GMT   |   Update On 2020-11-13 04:12 GMT
அ.தி.மு.க. அரசை யாராலும் அசைக்க முடியாது என அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறினார்.
விருதுநகர்:

விருதுநகர் - அருப்புக்கோட்டை ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அ.தி.மு.க. கிளை நிர்வாகிகளுக்கு தீபாவளி புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் விருதுநகர் வந்திருந்த போது பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார். இதன் மூலம் 8 லட்சம் தொழிலாளர்களுக்கு கல்வி உதவி தொகை, மருத்துவ சிகிச்சை போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் கிடைக்க வாய்ப்பு ஏற்படும்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தீப்பெட்டி, பட்டாசு, நெசவு, விவசாயம் ஆகிய தொழிலாளர்களின் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

எம்.ஜி.ஆர். ஆட்சியை, ஜெயலலிதா ஆட்சியை அவர்கள் வளர்த்த கட்சியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் கட்டுக்கோப்பாக நடத்தி வருகின்றனர்.

அ,தி.மு.க அரசை அ.தி.மு.க.வை யாராலும், எந்த கொம்பானாலும் அசைக்க முடியாது. தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமியை, பன்னீர்செல்வத்தை தனக்கு பயப்படுவதாக கூறி கொண்டு இருக்கிறார். அவர் பகல் கனவு காண்கிறாார். எதுவும் நடக்க போவதில்லை. அ.தி.மு.க. தொண்டன் உள்ளூர் பிரச்சினையில் இருந்து உலக பிரச்சினை வரை தெரிந்து வைத்து மக்களுக்காக பாடுபட்டு வருகிறான். தி.மு.க. தொண்டன் பக்கத்து வீட்டில் பிரச்சினை நடந்தாலே வீட்டை பூட்டி கொண்டு உள்ளே இருந்து கொள்வான். வர இருக்கிற சட்டமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முதல்-அமைச்சர் ஆவது உறுதி.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் கோகுலம் குழும தலைவர் கோகுலம் தங்க ராஜ், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் தர்மலிங்கம், கே.கண்ணன், பொருளாளர் ராஜசேகர், அவைத்தலைவர் எஸ்.கே. சீனிவாசன், மாவட்ட அவைத்தலைவர் விஜயகுமார், நகர செயலாளர் முகமது நயினார், முன்னாள் நகரசபை துணை தலைவர் மாரியப்பன், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் மூக்கையா உள்ளிட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News