செய்திகள்
கொலை நடைபெற்ற வீடு இருந்த தெருவில் போலீஸ் அதிகாரிகள்

கணவருடன் மாமனார், மாமியாரை சுட்டுக்கொன்றது மருமகள்: சென்னை 3 பேர் கொலையில் தகவல்

Published On 2020-11-12 12:13 GMT   |   Update On 2020-11-12 12:13 GMT
சென்னை யானைக்கவுனி வால்டாக்ஸ் ரோடு விநாயகம் மேஸ்திரி தெருவில் நடைபெற்ற 3 பேர் கொலைக்கு மருமகளே காரணம் என போலீசார் விசாணையில் தெரியவந்துள்ளது.
சென்னை யானைக்கவுனி வால்டாக்ஸ் ரோடு விநாயகம் மேஸ்திரி தெருவில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் தலில் சந்த். 74 வயதான இவர் சவுகார்பேட்டையில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். இவர், மனைவி புஷ்பா பாய் மற்றும் மகன் ஷீத்தல் ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார்.

தலில் சந்தின் மகள் திருமணம் ஆகி சென்னையில் தனியாக வசித்து வருகிறார். நேற்று மாலை இவர் தந்தைக்கு போன் செய்துள்ளார். நீண்ட நேரமாக போனை எடுக்காததால் வீட்டுக்கு சென்று பார்த்தார். அப்போது அவர் கண்ட காட்சி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தந்தை தலில் சந்த், தாய் புஷ்பா பாய், சகோதரன் ஷீத்தல் ஆகியோர் குண்டு காயங்களுடன் பிணமாக கிடந்தனர். அவர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு யாரோ தப்பி சென்று இருப்பது தெரியவந்தது.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் போலீஸ் படையுடன் அங்கு விரைந்து சென்றார்.

வடசென்னை உயர் போலீஸ் அதிகாரியுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். யானைக்கவுனி போலீசார் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தில் தடயங்களை சேகரித்தனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். மோப்ப நாய் உதவியுடன் வீடு முழுவதும் ஏதும் தடயங்கள் சிக்குமா? என்பது பற்றி ஆய்வு செய்யப்பட்டது.

வால்டாக்ஸ் ரோடு மிகவும் பரபரப்பான பகுதி ஆகும். எப்போதும் நெரிசலுடன் காணப்படும் இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் மிகவும் துணிச்சலாக கொலையாளிகள் 3 பேரை சுட்டுக்கொன்று விட்டு தப்பிச் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கொலை சம்பவம் நேற்று பிற்பகலில் நடந்து இருக்க வேண்டும் என்று போலீசார் கருதுகிறார்கள். மாலையில் தலில் சந்தின் மகள் பிங்கி வீட்டுக்கு சென்று பார்க்காவிட்டால் 3 பேரும் கொலை செய்த சம்பவம் வெளியில் தெரியவந்து இருக்காது.

கொலை நடந்த வீட்டில் நேரில் சென்று விசாரணை நடத்திய போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் கொலையாளிகளை பிடிக்க அதிரடி நடவடிக்கைகளை முடுக்கி விட்டார். உடனடியாக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இந்த தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணையை தொடங்கினர்.

3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கான காரணம் என்ன? கொலையாளி யார்? என்பது பற்றிய தகவல்கள் இதுவரை முழுமையாக கிடைக்கவில்லை. இருப்பினும் குடும்ப தகராறு காரணமாகவே இந்த துணிகர கொலை சம்பவம் நடந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

தலில் சந்தின் மகன் ஷீத்தல் திருமணம் ஆகி மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். அவரது பெயர் ஜெயமாலா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவது தொடர்பாக அடிக்கடி குடும்பத்துக்குள் சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. 



கணவர் ஷீத்தலை பிரிந்து ஜெயமாலா புனேயில் வசித்து வருகிறார். ஷீத்தல்- ஜெயமாலா இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மோதல் வரையிலும் சென்றதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதனால் 3 பேர் கொலை சம்பவத்தில் ஜெயமாலாவின் குடும்பத்தினருக்கு தொடர்பு இருக்கலாமா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த புனே விரைந்துள்ளனர்.

இந்நிலையில் மருமகள்தான் மூன்று பேரையும் சகோதரர்கள் உதவியுடன் சுட்டுக்கொன்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. ஏற்கனவே ஜெயமாலா மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், அதேவேளையில் புனேயில் ஜெயமாலா வரதட்சணை கொடுமை தொடர்பாக புகார் அளித்திருப்பதாகவும் விசாரைணயில் தெரியவந்துள்ளது.

ஜெயமாலாவை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
Tags:    

Similar News