செய்திகள்
ஜேபி நட்டா

வேல் யாத்திரை நிறைவு விழாவில் ஜே.பி.நட்டா பங்கேற்பு- பாஜக மாநில செயலாளர் பேட்டி

Published On 2020-11-12 02:24 GMT   |   Update On 2020-11-12 02:24 GMT
வேல் யாத்திரையின் நிறைவு விழாவில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பங்கேற்கிறார் என்று மாநில செயலாளர் கே.டி.ராகவன் கூறினார்.
சென்னை:

பா.ஜ.க. மாநில செயலாளர் கே.டி.ராகவன், சென்னை கமலாலயத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

கொரோனாவை கூறி வேல் யாத்திரைக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஆனால், அ.தி.மு.க., தி.மு.க. கூட்டங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது. கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் தி.மு.க. காங்கிரஸ், கம்யூனிஸ்டு உள்ளிட்ட இதர கட்சிகள் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தி உள்ளனர்.

அவர்கள், இதுபோன்ற போராட்டங்களுக்கு போலீசாரிடம் அனுமதி பெற்றார்களா அவ்வாறு பெறவில்லை என்றால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதா என்று எதுவும் தெரியவில்லை.

அ.தி.மு.க. அமைச்சர்கள் நடத்தும் கூட்டங்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுவது இல்லை. முதல்-அமைச்சர் எடப்பாடி செல்லும் இடங்களில் கூட அ.தி.மு.க. தொண்டர்கள் கூடுகின்றனர். அவ்வாறு கூட்டம் கூடும்போதெல்லாம் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. உள்ளது. ஆனால், பா.ஜ.க. நடத்தும் வேல் யாத்திரைக்கு தடை விதிக்கப்படுகிறது.

வேல் யாத்திரைக்கு தடை விதித்த தமிழக அரசின் நடவடிக்கையில் உள்நோக்கம் இருப்பதாக தான் எங்களுக்கும் தெரிகிறது.

மீண்டும் 17-ந் தேதி 2-ம் கட்ட வேல்யாத்திரை தொடங்குகிறது. டிசம்பர் 6-ந் தேதி வேல் யாத்திரையின் நிறைவு விழா திட்டமிட்டபடி திருச்செந்தூரில் பிரமாண்டமாக நடைபெறும். இதில், பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பங்கேற்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது ஊடகப்பிரிவு தலைவர் ஏ.என்.எஸ்.பிரசாத் உடன் இருந்தார்.
Tags:    

Similar News