செய்திகள்
சுட்டுக்கொல்லப்பட்ட குடியிருப்பு பகுதியில் போலீசார் விசாரணை நடத்தியபோது எடுத்த படம்.

நிதி நிறுவன அதிபர் குடும்பத்தில் 3 பேர் சுட்டுக்கொலை - கொலையாளிகளை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டை

Published On 2020-11-11 18:53 GMT   |   Update On 2020-11-11 18:53 GMT
சென்னை வால்டாக்ஸ் ரோடு அடுக்குமாடி குடியிருப்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டன.
பெரம்பூர்:

சென்னை சவுகார்பேட்டையில் நிதி நிறுவனம் நடத்தி வந்தவர் தலில்சந்த் (வயது 74).

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இவர் வால்டாக்ஸ் ரோடு விநாயகம் மேஸ்திரி தெரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இவரது மனைவி புஷ்பா பாய்(70). இந்த தம்பதியருக்கு ஷீத்தல்(40)என்ற மகனும், பிங்கி என்ற மகளும் உண்டு.

மகன் ஷீத்தல் தந்தை தலில்சந்துடன் சேர்ந்து நிதி நிறுவனத்தை நிர்வகித்து வந்தார்.

தலில்சந்தின் மகள் பிங்கி திருமணமாகி சென்னையில் தனியாக குடும்பத்துடன் வசித்து வருகிறார். மகன் ஷீத்தலுக்கு திருமணமாகி ஜெபமாலா என்ற மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தற்போது ஜெபமாலா வெளியூரில் வசித்து வருவதாக கூறப்படுகிறது. தற்போது இந்த வீட்டில் தலில்சந்த், மனைவி புஷ்பா பாய், மகன் ஷீத்தல் ஆகிய 3 பேரும் தனியாக வசித்து வந்தனர். எப்போதும் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதி இது.

இந்த நிலையில், நேற்று மாலை மகள் பிங்கி, வீட்டில் இருந்த தந்தை தலித்சந்த் வீட்டிற்கு போன் செய்துள்ளார். இதையடுத்து, வெகுநேரமாகியும் அவர் போனை எடுக்காததால் சந்தேகம் அடைந்த பிங்கி நேராக வீட்டுக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது வீட்டின் வெளிப்பக்கம் தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்ததால் சந்தேகம் அடைந்த அவர், திறந்து உள்ளே சென்று பார்த்தபோது தாய், தந்தை, சகோதரர் 3 பேரும் மெத்தையில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதைப்பார்த்து கதறி அழுத பிங்கி உடனே யானைகவுனி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் 3 பேரின் உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் அவர்கள் 3 பேரையும் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்திருப்பது தெரியவந்தது.

சம்பவ இடத்திற்கு சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், கூடுதல் கமிஷனர் அருண்குமார், வடக்கு மண்டல போலீஸ் இணை கமிஷனர் பாலகிருஷ்ணன் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் முழுவதும் இரும்பு தடுப்பு அமைத்து போலீஸ் கண்காணிப்புக்குள் கொண்டு வந்தனர்.

அப்பகுதியில் பல வீடுகளில் கண்காணிப்பு கேமராக்கள் இருக்கின்றன. அந்த கேமராக்களின் பதிவுகளை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்கின்றனர்.

மோப்ப நாயை வரவழைக்கப்பட்டது. அந்த நாய் சிறிது தூரம் ஓடிச் சென்று நின்று விட்டது. மேலும் கைரேகை நிபுணர்கள் அங்கு பதிவான தடயங்களை பதிவுகளை பதிவு செய்தனர்.

3 பேர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் கொள்ளை முயற்சியை தடுத்ததால் நடந்ததா?, சொத்து தகராறால் ஏற்பட்டதா? அல்லது முன்விரோதம் காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர். கொலையாளிகளை பிடிக்க தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News