செய்திகள்
எடப்பாடி பழனிசாமி, நடராஜன்

இந்திய அணிக்கு தேர்வு பெற்ற கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

Published On 2020-11-10 20:58 GMT   |   Update On 2020-11-10 21:27 GMT
இந்திய அணிக்கு தேர்வு பெற்ற தமிழக வீரர் நடராஜனுக்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
சென்னை:

ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய 20 ஓவர் கிரிக்கெட் அணியில் தமிழக வீரர் நடராஜன் சேர்க்கப்பட்டுள்ளார். இதற்கு நடராஜனுக்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி டுவிட்டரில் பதிவிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களை தமது அசாத்திய பந்துவீச்சால் திக்குமுக்காடச் செய்த சேலம் மண்ணின் மைந்தர் நடராஜன் இந்திய அணிக்கு தேர்வாகியுள்ளது மிகுந்த மகிழ்ச்சியும் பெருமிதமும் அளிக்கிறது. அவரது சிகரம் நோக்கிய பயணத்தில் தொடர் வெற்றிகள் பெற எனது மனமார்ந்த வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தனது முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது:-

இந்திய கிரிக்கெட் அணியில் விளையாட தேர்வு பெற்றுள்ள தமிழக இளைஞர் சேலம் நடராஜனுக்கு என்னுடைய வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். நடராஜனை தொடர்புகொண்டு பேசி வாழ்த்துகளை தெரிவித்தேன். அவர் மேலும் பல உயர்வுகளை பெறவும், வெற்றிகளை குவிக்கவும், அவர் மூலமாக இந்திய அணிக்கு பெருமை சேர்க்கவும் எனது விருப்பங்களை தெரிவித்தேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “எளிய குடும்பத்தில் பிறந்து, பல முட்டுக்கட்டைகளை முறியடித்து, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 20-20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சேலம் சின்னப்பம்பட்டியைச் சேர்ந்த வீரத்தமிழன் தங்கராசு நடராஜன் சாதனைகள் படைக்க வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.

இதேபோல பா.ஜ.க. தலைவர் எல்.முருகனும் நடராஜனுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News