ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெறும் ஊஞ்சல் உற்சவத்தையொட்டி நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் நெல்லளவு கண்டருளினார். நாளை தீர்த்தவாரி நடக்கிறது.
உற்சவத்தின் 7-ம் நாளான நேற்று நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் மூலஸ்தானத்திலிருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு கொட்டார வாசலில் நெல்லளவு கண்டருளிய பின்னர் மாலை 6.45 மணிக்கு தாயார் சன்னதியில் திருவந்திக்காப்பு கண்டருளினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இரவு 7.15 மணிக்கு ஊஞ்சல் மண்டபம் வந்தடைந்தார். அதன்பின்னர், இரவு 8.15 மணிமுதல் இரவு 9.15 மணிவரை ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து அங்கிருந்து நம்பெருமாள் இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு இரவு 10.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.
விழாவின் நிறைவு நாளான நாளை நம்பெருமாள் சந்திர புஷ்கரணியில் காலை 9.45 மணிக்கு தீர்த்தவாரி கண்டருளுவதுடன் விழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் வேணு சீனிவாசன், இணை ஆணையர் ஜெயராமன், உதவி ஆணையர் கந்தசாமி மற்றும் அறங்காவலர்கள் செய்து வருகின்றனர்.