செய்திகள்
சித்தி டாக்டர் சரளா கோபாலன் - கமலா ஹாரிஸ்

கமலா ஹாரிஸ் ஒரு நாள் அமெரிக்காவின் முதல் பெண் ஜனாதிபதி ஆவார் - சென்னை ‘சித்தி’ உற்சாகம்

Published On 2020-11-08 23:24 GMT   |   Update On 2020-11-08 23:24 GMT
‘கமலா ஹாரிஸ் எப்படியும் ஒரு நாள் அமெரிக்காவின் முதல் பெண் ஜனாதிபதியாக வருவார்’ என்று அவருடைய சித்தி நம்பிக்கையுடனும், உற்சாகத்துடனும் கூறினார்.
சென்னை:

‘கமலா ஹாரிஸ் எப்படியும் ஒரு நாள் அமெரிக்காவின் முதல் பெண் ஜனாதிபதியாக வருவார்’ என்று சென்னையில் உள்ள அவருடைய சித்தி டாக்டர் சரளா கோபாலன் நம்பிக்கையுடனும், உற்சாகத்துடனும் கூறினார்.

அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் தேர்வு பெற்றுள்ளார். இவர் தமிழகத்தில் உள்ள திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுகா துளசேந்திரபுரம் கிராமத்தை சேர்ந்த கோபாலன் என்பவருடைய மகள் வழி பேத்தி ஆவார்.

கமலா ஹாரிசின் தாயார் டாக்டர் சியாமளா கோபாலனின் தங்கையும், கமலா ஹாரிசின் சித்தியுமான டாக்டர் சரளா கோபாலன் சென்னையில் வசித்து வருகிறார். இவர் கமலா ஹாரிஸ், துணை ஜனாதிபதியாக தேர்வு பெற்றதில் மிகுந்த மகிழ்ச்சியும், பெருமிதமும் அடைந்துள்ளார்.

கமலா ஹாரிஸ் குறித்து டாக்டர் சரளா கோபாலன் கூறியதாவது:-

அமெரிக்கா நாட்டு துணை ஜனாதிபதியாக கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டார் என்ற செய்தி அறிந்ததும் எங்களுக்கு மெய்சிலிர்த்தது. நாங்கள் மகிழ்ச்சியடைந்ததுடன், உற்சாகமாக இருக்கிறோம். இதனை ஒரு வரலாற்று வெற்றியாகத்தான் பார்க்கிறோம். அவர் எப்படியும் துணை ஜனாதிபதியாக விடுவார் என்ற நம்பிக்கை எங்கள் அனைவருக்கும் முன்பே இருந்தது. இதுவரை கமலாவிடம் பேசவில்லை.

இன்று கமலா வாழ்வில் இந்த உயர்வான நிலைக்கு வந்திருக்கிறார் என்பதை பார்த்து ஆனந்தப்பட அவருடைய தாயாரும், என்னுடைய சகோதரியுமான டாக்டர் சியாமளா கோபாலன் இல்லாமல் போய்விட்டார். அவர் இன்றைக்கு இருந்து இருந்தால் ஆனந்த கண்ணீர் விட்டிருப்பார். இந்த நல்ல நேரத்தில் அவர் எங்களுடன் இல்லையே என்ற வருத்தம் எங்களுக்கு அதிகமாக உள்ளது. என்னுடைய அப்பாவும், அம்மாவும் அவர்களுடைய பேத்தி கமலா ஹாரிசை நினைத்து பெருமைப்படுகிறார்கள்.

கமலா ஹாரிஸ் இப்போதும் உறவுகளை மறக்கவில்லை. நேரம் கிடைக்கும்போதெல்லாம் என்னை தொடர்பு கொண்டு ‘சித்தி’ என்று அழைத்து நலம் விசாரிப்பதில் தவறுவதில்லை. வருகிற ஜனவரி மாதம் அவர் பதவி ஏற்கும் விழாவில் பார்வையாளர்களாக எங்கள் குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொண்டு அவருக்கு வாழ்த்துக்களையும், ஆசியையும் வழங்குவோம். இதற்காக விரைவில் அமெரிக்கா புறப்பட்டு செல்ல இருக்கிறோம்.

எப்படியும் ஒரு நாள் கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் முதல் பெண் ஜனாதிபதியாக வருவார் என்பதில் எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கமலா ஹாரிசின் தாய்மாமா கோபாலன் பாலசந்திரன், டெல்லியில் வசித்து வருகிறார்.

அவர் கமலா ஹாரிஸ் பற்றி கூறியதாவது:-

அமெரிக்க தேர்தலில் ஜோ பைடன், கமலா ஹாரிஸ் வெற்றி பெறுவதை நாங்கள் பார்க்க விரும்பினோம். வாக்கு எண்ணிக்கை நிலவரத்தை பார்த்து நேற்று (நேற்று முன்தினம்) நான் கமலாவுடன் தொலைபேசியில் பேசினேன். நிச்சயம் அவர் வெல்வார் என்று சொன்னேன்.

கமலா ஹாரிஸ் துணை ஜனாதிபதி ஆகி இருப்பதால் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறோம். அவர் ஒரு போராளி ஆவார்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News