தமிழ்நாட்டின் தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளில் 80 சதவீதத்தை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் வழங்க வகை செய்ய வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அரியானாவில் தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளில் உள்ளூர் இளைஞர்களுக்கு 75 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. உள்ளூர் மக்களின் வேலைவாய்ப்பு உரிமையை பாதுகாக்கும் இச்சட்டம் வரவேற்கத்தக்கதும், போற்றத்தக்கதும் ஆகும்.
இந்தியா ஒற்றை நாடு என்ற உணர்வை ஏற்படுத்தும் முயற்சிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருந்தாலும், எங்கள் மாநில வேலைகள்... எங்கள் மக்களின் உரிமை என்பதை மற்ற மாநிலங்களுக்கு வலியுறுத்திக் கூறுவதில் பல மாநிலங்கள் தீவிரம் காட்டி வருகின்றன. தமிழக தனியார் வேலைவாய்ப்புகளை மட்டும் அனைவருக்கும் திறந்து விட்டால், தமிழக இளைஞர்கள் படித்த படிப்புக்கு வேலையில்லாமல் வறுமையில் தான் வாட வேண்டும்.
எனவே, நான் கடந்த காலங்களில் பலமுறை வலியுறுத்தியதை மீண்டும் ஒரு முறை வலியுறுத்துகிறேன், தமிழ்நாட்டின் தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளில் 80 சதவீதத்தை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் வழங்க வகை செய்ய வேண்டும்.
இதற்கான அவசர சட்டத்தை பிறப்பிக்க அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.