செய்திகள்
சென்னை மாநகராட்சி

சொத்து வரி அபராதம் 2 சதவீதத்தில் இருந்து 0.5 சதவீதமாக குறைப்பு

Published On 2020-11-07 02:48 GMT   |   Update On 2020-11-07 02:48 GMT
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி அபராத தொகை 2 சதவீதத்தில் இருந்து 0.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
சென்னை:

சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்ட விதிகளில் குறிப்பிடப்பட்ட காலத்துக்குள் சொத்து வரி செலுத்தும் உரிமையாளருக்கு, அதாவது முதல் அரையாண்டு தொடக்க காலமான ஏப்ரல் 1 முதல் 15-ந் தேதிக்குள்ளும், 2-வது அரையாண்டு தொடக்க காலமான அக்டோபர் 1 முதல் 15-ந் தேதிக்குள்ளும் வரி செலுத்தினால் 5 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகையாக வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.

உரிய காலத்துக்குள் சொத்து வரி செலுத்தாதவர்களுக்கு நிகர சொத்து வரியுடன் (கல்வி வரி, நூலகத் தீர்வை தவிர்த்து) கூடுதலாக ஆண்டுக்கு 2 சதவீதம் மிகாமல் தனி வட்டியுடன் அபராதத்தொகை விதிக்கப்படும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

கொரோனா பொது ஊரடங்கால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள வேலை மற்றும் பொருளாதார இழப்பை கருத்தில் கொண்டு 2-வது அரையாண்டு காலமான கடந்த அக்டோபர் 1-ந் தேதியில் இருந்து சொத்து வரி செலுத்தாதவர்களுக்கு அபராத தொகை 2 சதவீதத்தில் இருந்து 0.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

இந்த தொகையை அடுத்த ஆண்டு மார்ச் 31-ந் தேதிக்குள் செலுத்த வேண்டும். ஏற்கனவே 2 சதவீதம் அபராதம் செலுத்தியவர்களுக்கு 0.5 சதவீதம் அபராதம் கணக்கிட்டு மீதமுள்ள தொகை அடுத்த அரையாண்டுக்கு ஈடுகட்டப்படும். அடுத்து வரும் நிதி ஆண்டின் முதல் அரையாண்டின் அதாவது ஏப்ரல் 1-ந் தேதி முதல் குறிப்பிட்ட காலத்துக்குள் சொத்து வரி செலுத்தப்படாதவர்களுக்கு ஆண்டுக்கு 2 சதவீதம் அபராதம் வசூல் செய்யப்படும்.

2020-21-ம் நிதி ஆண்டில் முதல் அரையாண்டு மற்றும் 2-வது அரையாண்டில் செலுத்த வேண்டிய சொத்து வரி அக்டோபர் 31-ந் தேதி வரை ரூ.249.34 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட தகவல்கள் பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News