செய்திகள்
ஐகோர்ட் மதுரை கிளை

கிராமங்களில் வேலை செய்யும் அரசு டாக்டர்களுக்கு செய்த வசதிகள் என்னென்ன?- மதுரை ஐகோர்ட்டு கேள்வி

Published On 2020-11-07 02:17 GMT   |   Update On 2020-11-07 02:17 GMT
கிராமங்களில் வேலை செய்யும் அரசு டாக்டர்களுக்கு செய்து கொடுக்கப்பட்ட வசதிகள் என்னென்ன என்று தமிழக அரசு பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
மதுரை:

மதுரையை சேர்ந்த முகமது யுனீஸ் ராஜா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ‘அரசு டாக்டர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால், ஏழை நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே அரசு டாக்டர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும்’ என கூறியிருந்தார்.

இந்த வழக்கு, நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஏற்கனவே அரசு டாக்டர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகள் குறித்து தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்து இருந்தது.

ஆனால், “இந்த பதில் மனு திருப்தி அளிக்கவில்லை” என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

பின்னர், கிராமப்பகுதிகளில் பணியாற்றும் டாக்டர்களுக்கு என்னென்ன வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன? கிராமங்கள் மற்றும் ஊரக பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் சென்றுவர போக்குவரத்து வசதி செய்யப்பட்டுள்ளதா? டாக்டர்களின் தொடக்க கால ஊதியம் எவ்வளவு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது? அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஊதியம் எவ்வளவு? என்ற கேள்விகளுக்கு விரிவான பதில்மனு தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
Tags:    

Similar News