செய்திகள்
சென்னை ஐகோர்ட்டு

வேல் யாத்திரைக்கு தடை கேட்ட வழக்குகள் முடித்து வைப்பு

Published On 2020-11-05 06:25 GMT   |   Update On 2020-11-05 06:25 GMT
வேல் யாத்திரை விவகாரத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்குகளை சென்னை ஐகோர்ட்டு முடித்து வைத்தது.
சென்னை:

தமிழகத்தில் வரும் 6-ம் தேதி முதல் டிசம்பர் 6-ம் தேதி வரை பாஜக நடத்தும் வேல் யாத்திரை நிகழ்ச்சியில் அக்கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் பலர் பங்கேற்க உள்ளனர். நவம்பர் 6-ந்தேதி திருத்தணியில் தொடங்கும் வேல் யாத்திரை, டிசம்பர் 6-ந்தேதி திருச்செந்தூரில் நிறைவு பெறுகிறது.

இந்நிலையில், வேல் யாத்திரைக்கு தடை விதிக்கக்கோரி செந்தில்குமார், பாலமுருகன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்றது. பாஜகவின் வேல் யாத்திரைக்கு தடை கோரிய வழக்கில் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் வாதம் செய்தார்.

இந்நிலையில் நாளை தொடங்க உள்ள பாஜகவின் வேல் யாத்திரைக்கு அனுமதி அளிக்க முடியாது என்று தமிழக அரசு தகவல் தெரிவித்தது. மேலும் கொரோனாவுக்கான 2, 3ம் அலைக்கான அச்சுறுத்தல் உள்ளதால் வேல் யாத்திரைக்கு அனுமதி தர முடியாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஆனால் பள்ளி, கல்லூரிகளை திறக்க அரசு முடிவு செய்துள்ள நிலையில் வேல் யாத்திரையை தடுப்பது சரியல்ல என பாரதிய ஜனதா தரப்பில் வாதிடப்பட்டது.

‘கொரோனா தொற்று குறைந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. வேல் யாத்திரையின்போது குறிப்பிட்ட எந்த பகுதியிலும் தங்கப்போவதில்லை. குறிப்பிட்டு எந்த பகுதியையும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதி என அறிவிக்கவில்லை’ என்றும் பாரதிய ஜனதா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பாஜகவின் வேல் யாத்திரைக்கு தடை கேட்டு, செந்தில்குமார், பாலமுருகன் தொடர்ந்த 2 பொதுநல வழக்குகளை சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முடித்து வைத்தது.

வேல் யாத்திரை தொடர்பாக அரசு பிறப்பிக்கும் உத்தரவுக்கு பின் வழக்கு தொடரலாம் என்று ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

வேல் யாத்திரைக்கு அனுமதி தர முடியாது என பாஜகவிடம் தெரிவிக்கப்படும் என்று தமிழக அரசு ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News