செய்திகள்
மெட்ரோ ரெயில்

சென்னையில் பருவமழை, புயலை எதிர்கொள்ள மெட்ரோ ரெயில்கள் தயார்

Published On 2020-11-04 08:30 GMT   |   Update On 2020-11-04 08:30 GMT
வானிலை நிலவரங்கள் குறித்து உடனுக்குடன் தகவல் பெறப்பட்டு, அதற்கு ஏற்ப செயல்பட மெட்ரோ ரெயில் நிறுவனத்தில் கட்டுப்பாட்டு மையத்தில் சிறப்பு கண்காணிப்பு குழு உருவாக்கப்பட்டுள்ளது.
சென்னை:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பொதுமக்கள் பாதுகாப்பாக பயணம் செய்ய துரித நடவடிக்கைகளை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

மழைக்காலங்களில் ரெயில் நிலையத்தின் சுற்றுப்புறங்கள், ரெயில் நிலைய வளாகங்கள், ரெயில் பெட்டிகள், உயர்மட்ட பாதை, சுரங்க வழிப்பாதைகள் என முக்கிய இடங்கள் மழை, புயல் போன்ற இயற்கை சீற்றங்களை எதிர்கொள்ளும் வகையில் உரிய பாதுகாப்புடன் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

ஆனாலும் எதிர்பாராத இயற்கை நிகழ்வுகளை கணக்கில் கொண்டு பயணிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.

வானிலை நிலவரங்கள் குறித்து உடனுக்குடன் தகவல் பெறப்பட்டு, அதற்கு ஏற்ப செயல்பட மெட்ரோ ரெயில் நிறுவனத்தில் கட்டுப்பாட்டு மையத்தில் சிறப்பு கண்காணிப்பு குழு உருவாக்கப்பட்டுள்ளது.

புயல் காலங்களில் காற்றின் வேகத்தை துல்லியமாக அளந்து தகவல் தரும் கருவிகள், செயல்பாட்டு கட்டுப்பாட்டு மையம், விமான நிலையம், ஆலந்தூர் ரெயில் நிலையம் உள்பட முக்கிய இடங்களில் பொருத்தப்பட்டுள்ளது.

புயல் காலங்களில் காற்றின் வேகம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு, அதற்கேற்ப செயல்படும் வகையில், ரெயில் ஓட்டுனர்கள் பயிற்றுவிக்கப்பட்டுள்ளார்கள்.

புயலின் வேகம் 90 கி.மீ. தாண்டும்போது, ரெயில் இயக்கம் நிலைமை சரியாகும் வரை தற்காலிகமாக நிறுத்தப்படும். மழை காலங்களில் பயணிகள் அச்சம் இன்றி பயணிக்க தொடர் அறிவிப்புகளும், வழிகாட்டுதல்களும் வழங்கப்படும்.

மின்னல் தாக்குதலில் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கும் அதிநவீன கருவிகள், முக்கிய துணை நிறுவனங்களில் நிறுவப்பட்டுள்ளன. இந்த கருவிகள் மின்னல் பாதிப்பை தடுத்து பாதுகாப்பை உறுதி செய்யும்.

இந்த தகவலை மெட்ரோ ரெயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News