செய்திகள்
அண்ணா பல்கலைக்கழகம்

நடப்பு செமஸ்டர் தேர்வும் ஆன்லைனில் நடக்கும்- அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

Published On 2020-11-01 01:40 GMT   |   Update On 2020-11-01 01:40 GMT
என்ஜினீயரிங் மாணவர்களுக்கு நடப்பு செமஸ்டர் தேர்வும் ஆன்லைனில் நடக்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
சென்னை:

கொரோனா தொற்று காரணமாக என்ஜினீயரிங் மாணவர்களுக்கான இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வு ஆன்லைன் மூலம் நடத்தப்படும் என்று முதலாவதாக அண்ணா பல்கலைக்கழகம் தான் அறிவித்தது. அதன்படியே ஆன்லைனில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தேர்வை வெற்றிகரமாக நடத்தி முடித்தது. அதில் 93 சதவீதம் மாணவர்கள் பங்கு பெற்று தேர்வை எழுதினார்கள். அதன் தொடர்ச்சியாக தற்போது நடப்பு ஆகஸ்டு- நவம்பர் மாத செமஸ்டர் தேர்வும் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து இருக்கிறது.

இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகத்தின் கல்வி படிப்புகளுக்கான மையத்தின் இயக்குனர் ஹோசிமின் திலகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு கல்லூரிகளில் இளநிலை (முழு நேரம், பகுதிநேரம்), முதுநிலை (முழு நேரம், பகுதிநேரம்) படிக்கும் என்ஜினீயரிங் மாணவர்களுக்கு நடப்பாண்டுக்கான (ஆகஸ்டு-நவம்பர் 2020) செமஸ்டர் தேர்வு ஆன்லைன் மூலம் நடத்தப்படுகிறது.

இந்த ஆன்லைன் தேர்வுக்கு ஒரு மணி நேரம் கால அவகாசம் வழங்கப்படும். மொத்தம் 60 மதிப்பெண்ணுக்கு வினாக்கள் கேட்கப்படும். அது 100 மதிப்பெண்ணுக்காக மாற்றப்படும். 60 மதிப்பெண்களில் 30 மதிப்பெண் ஒரு மதிப்பெண் வினாக்களாகவும் (30 வினாக்கள்), மற்ற 30 மதிப்பெண் 2 மதிப்பெண் வினாக்களாகவும் (15 வினாக்கள்) கேட்கப்படும். இந்த வினாக்கள் அனைத்தும் கொள்குறி வகை வினாக்களாகவே கேட்கப்படும்.

தேர்ச்சிக்கான தேவைகள் மற்றும் ஒதுக்கப்பட்ட வெயிட்டேஜ்கள் அந்தந்த ஒழுங்குமுறைப்படி இருக்கும். அரியர் மாணவர்களுக்கான தேர்வும் இதே மாதிரியாக தான் இருக்கும். தகுதிவாய்ந்த அதிகாரத்திடம் இருந்து வழிகாட்டுதல் பெற்ற பின்னர் நடத்தப்படும்.

அதேபோல், தொலைதூர கல்வியில் வழக்கமான படிப்புகளை படிக்கும் மாணவர்களுக்கான அனைத்து செமஸ்டர் தேர்வுகளும் ஆன்லைனில் நடத்தப்படும். இந்த தேர்வு முறை அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு கல்லூரிகளுக்கு பொருந்தும். அரியர் மாணவர்களுக்கான தேர்வும் இதேபோல் ஆன்லைனில் தான் நடக்கும். ஆய்வுகூறுகளுடன் கோட்பாடு பாடத்தின் மதிப்பீடு மற்றும் ஆய்வுகூறு மதிப்பீடு ஆன்லைனில் நடத்தப்படும்.

இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை ஆன்லைனில் எழுதிய மாணவர்களுக்கு தேர்வு மதிப்பெண் வழங்குவது குறித்து குழு முடிவு செய்திருக்கிறது. அதன்படி, அவர்களுக்கு உள்மதிப்பீடு அடிப்படையில் மதிப்பெண் வழங்கமுடியாத காரணத்தினால், கிரேடு மதிப்பெண் அடிப்படையில் 70 சதவீதமும், ஆன்லைனில் அவர்கள் தேர்வு எழுதியதின் அடிப்படையில் 30 சதவீதம் என கணக்கிடப்பட்டு மதிப்பெண் வழங்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News