செய்திகள்
பத்திரங்கள் பதிவு

தமிழகத்தில் ஒரே நாளில் 20,307 பத்திரங்கள் பதிவு

Published On 2020-10-31 02:12 GMT   |   Update On 2020-10-31 02:12 GMT
தமிழகத்தில் சொத்துகள் வாங்கல், கொடுக்கல் மீண்டெழும் நிலையில், ஒரே நாளில் 20,307 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சென்னை:

தமிழ்நாட்டில் சென்னை, கோவை, கடலூர், மதுரை, சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி, திருச்சி, வேலூர் ஆகிய மண்டலங்களில் 575 சார் பதிவாளர் அலுவலகங்கள் இருக்கின்றன. இதில் மதுரை மண்டலத்தில் அதிகபட்சமாக 102 அலுவலகங்களும், நெல்லையில் 85 அலுவலகங்களும், சென்னையில் 63 அலுவலகங்களும் இருக்கின்றன.

இந்த அலுவலகங்களில் தினமும் சொத்துகள் வாங்கல், கொடுக்கல் போன்ற விற்பனை மற்றும் வாங்குதலுக்கு பத்திரப்பதிவுகள் நடந்து வருகின்றன. கொரோனா நேரத்தில் கடுமையான பொருளாதார வீழ்ச்சி அடைந்த நிலையில், பத்திரப்பதிவுகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்திருந்தன. ஆனால், கடந்த செப்டம்பர் 4-ந் தேதிக்கு பிறகு பொருளாதாரம் மீண்டெழுந்ததன் அடையாளமாக பத்திரப்பதிவு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

செப்டம்பர் 4-ந் தேதி 18,967 பத்திரங்களும், 16-ந் தேதி 19,681 பத்திரங்களும் பதிவான நிலையில், நேற்று முன்தினம் (29-ந் தேதி) ஆன்லைன் பதிவு தொடங்கிய நாளில் இருந்து, இதுவரை இல்லாத அளவில் 20,307 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், சென்னை மண்டலத்தில்தான் அதிக அளவாக 3,604 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2-வதாக கோவை மண்டலத்தில் 3,161 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் அரசுக்கு 29-ந் தேதி ஒரே நாளில் ரூ.123 கோடியே 35 லட்சத்து 83 ஆயிரத்து 589 வருமானம் முத்திரைத்தாள் கட்டணமாகவும், பதிவு கட்டணமாகவும், மற்ற கட்டணங்கள் மூலமாகவும் கிடைத்துள்ளது.

இதில், சென்னை மண்டலம்தான் அதிக வருவாய் ஈட்டியுள்ளது. அதாவது, ரூ.48 கோடியே 72 லட்சத்து 44 ஆயிரத்து 188 கிடைத்துள்ளது. தினமும் இவ்வாறு பத்திரப்பதிவு அதிகமாகிக்கொண்டிருப்பதைப் பார்த்தால், கொரோனா பாதிப்பினால் வீழ்ச்சி அடைந்த தமிழக பொருளாதார நிலை உயிர்பெற்று வருகிறது என்பதைத்தான் காட்டுகிறது என்று ஒரு அதிகாரி தெரிவித்தார்.

பத்திரப்பதிவு அலுவலகங்களில் அனைவரும் முக கவசம் அணிந்து வரவேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்பது போன்ற உத்தரவுகளை பின்பற்றுவதில் எந்த தொய்வும் இருக்கக்கூடாது என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Tags:    

Similar News