செய்திகள்
சஞ்சய்தத், வி.எம்.சி.மனோகரன் ஆகியோர் டிராக்டரில் சென்று விவசாயிகளை சந்தித்து பேசியபோது எடுத்த படம்.

விவசாய சட்டங்களை மத்திய அரசு ரத்து செய்யும் வரை போராடுவோம்- காங். பொதுச்செயலாளர் சஞ்சய்தத் பேட்டி

Published On 2020-10-30 22:50 GMT   |   Update On 2020-10-30 22:50 GMT
வேளாண் சட்டங்களை மத்திய அரசு ரத்து செய்யும் வரை போராடுவோம் என்று அகில இந்திய பொதுச்செயலாளர் சஞ்சய்தத் கூறினார்.
கருமத்தம்பட்டி:

வேளாண் சட்டங்களை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று கோரி கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் சாமளாபுரம், சோமனூர், கரவளிமாதப்பூர் ஆகிய இடங்களில் பொதுமக்கள், விவசாயிகள், வணிகர்கள் என அனைத்து தரப்பு மக்களிடமும் கையெழுத்து பெறும் இயக்கம் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் வி.எம்.சி.மனோகரன் தலைமையில் தொடங்கியது. இதில் அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் சஞ்சய் தத் கலந்து கொண்டு பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மற்றும் விவசாயிகளிடமும் கையெழுத்து பெற்று தொடங்கி வைத்தார். இதையடுத்து அவர்கள் டிராக்டரில் சென்று விவசாயிகளை சந்தித்து கையெழுத்து பெற்றனர்.

அப்போது அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் சஞ்சய் தத் நிருபர்களிடம் கூறும்போது, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ஆணைக்கிணங்க தமிழகத்தில் விவசாய சட்டங்களுக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது. இதற்கு பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடம் மிகுந்த வரவேற்பு உள்ளது. விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்பதற்காக சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் விவசாயிகளுக்கு ஆதரவான நிலைப்பாடுகளை எடுத்துள்ளனர். விவசாய சட்டங்களை திரும்ப பெற எத்தகைய போராட்டத்தையும் முன்னெடுப்பதற்கு காங்கிரஸ் கட்சி தயாராக உள்ளது என்றார்.

இதில் மாநில பொதுச் செயலாளர் அருள் பெத்தய்யா, அகில இந்தியா காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் சரவணக்குமார், வட்டார தலைவர்கள் கராத்தே ராமசாமி, ராயல் மணி, சுல்தான்பேட்டை சிவக்குமார், நகர தலைவர்கள் சாமளாபுரம் பாலச்சந்தர், சோமனூர் பாலு, மாவட்ட நிர்வாகிகள் வி.எம்.ரங்கசாமி, தீரன் கந்தசாமி, வெங்கிடுபதி, துரைமணி, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் நவீன் உள்பட மாவட்ட, வட்டார, நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். மாவட்டம் முழுவதும் அனைத்து தரப்பு மக்களிடமும் கையெழுத்து பெற்று மாநில காங்கிரஸ் தலைவரிடம் ஒப்படைக்கப்படும் என மாவட்ட தலைவர் வி.எம்.சி.மனோகரன் தெரிவித்தார்.
Tags:    

Similar News